bjp

Advertisment

காடுவெட்டி குருவின் தந்தை ஜெயராமன். ஜெயராமனின் சகோதரரின் மைத்துனர் சின்னபிள்ளை. காடுவெட்டி கிராமத்தில் உள்ள நாட்டாமைகளில் சின்னபிள்ளையும் ஒருவர். குருவின் குடும்பத்திற்கும், சின்னபிள்ளை குடும்பத்திற்கும் சொத்துப் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. பாதை பிரச்சனையும் உள்ளது. குரு மறைந்த பிறகு அவ்வப்போது இதுதொடர்பாக குருவின் குடும்பத்தினருக்கும், சின்னபிள்ளை குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் (27.05.2020) அன்று குருவின் வீட்டாருக்கும், சின்னப்பிள்ளை வீட்டருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை நடந்துள்ளது. இதனை அறிந்த குரு மகன் கனலரசு, குருவின் மருமகன் மனோஜ் ஆகியோர் வந்துள்ளனர். சின்னபிள்ளை தரப்புக்கும், கனலரசு தரப்புக்கும் வாய்த் தகராறு நடந்துள்ளது. பின்னர் இருதரப்பும் மோதிக்கொண்டது. இதில் அரிவாள் வெட்டு, உருட்டுக்கட்டை அடி என விழுந்துள்ளது. குருவின் மருமகனுக்குத் தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. கனலரசனுக்கும் லேசான தாக்குதல் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மீன்சுருட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னபிள்ளையை மீன்சுருட்டி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், எனது அருமை நண்பர் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கணல் அரசன், மற்றும் குரு அவர்களின் மருமகன்கள் மனோஜ், மதன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிகள் மீது மாநில அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.