விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்தை பதிவிட்டு வருகிறார். அதில் இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் எனவும், இந்த பிரச்சனையில் தனக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவு தருவார் என தான் நம்புவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நபர்களை அடக்குவதற்கு சரியான நபர் ராம்தாஸ் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சை ட்வீட் போட்டுள்ளார்.