Skip to main content

“உங்கள் தாத்தா செய்ததையே, உங்கள் அப்பாவும் செய்தார்... வரலாற்றை மறக்காதீர்கள்” - ராகுலை சாடிய அண்ணாமலை! 

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

BJP Leader Annamalai Tweet about Rahul Gandhi Speech in Parliament

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31 ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தநிலையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

 

BJP Leader Annamalai Tweet about Rahul Gandhi Speech in Parliament

 

அப்போது ராகுல் காந்தி, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிட்டதுடன், தமிழ்நாட்டை உங்களின் வாழ்நாளில் ஆள முடியாது என பாஜகவை சாடினார். மேலும் தனது உரையின்போது நீட் விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி, மாநிலங்களின் உரிமை பற்றியும் பேசினார். ராகுல் காந்தியின் இந்த உரை, இந்திய அரசியலில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்து  எதிர்வினையாற்றி வருகின்றனர்.

 

BJP Leader Annamalai Tweet about Rahul Gandhi Speech in Parliament

 

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் பேச்சை விமர்சனம் செய்துள்ளார். அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ராகுல் காந்தி வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க.-வால் ஆட்சி செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார். இத்தமிழ்நாட்டின் மகனாக, இதுகுறித்து ராகுல் காந்தி அவர்களுக்கு, இனி என்ன நடக்கப்போகிறது என சொல்லவிரும்புகிறேன்.

 

1. உங்கள் கட்சி, தமிழ்நாட்டை சில காலங்களுக்கு ஆட்சி செய்தது. 1965-ம் ஆண்டு உங்கள் தாத்தா இந்தியை வலுக்கட்டாயமாக திணித்தார். அதன்பின் 1986-ம் ஆண்டு உங்கள் அப்பா அதை செய்தார்.


2. பின், காமராஜரை அவமதித்தீர்கள்.


3. 1974-ல், உங்கள் பாட்டி கச்சத்தீவை வெளிநாட்டுக்கு கொடுத்தார்.


4. உங்கள் கட்சியே, இலங்கை வாழ் தமிழர்களுக்கு இலங்கையில் நேர்ந்தவற்றுக்கு பொறுப்பு. 2009-ஐ நினைவுகூறுங்கள். எங்கள் பிரதமர், அவர்களுக்காக 50,000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுத்து அவர்கள் வாழ்வை மேம்படுத்தியுள்ளார்.



5. ஜல்லிக்கட்டை ஒரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு எனக்கூறி, அதை தடை செய்தீர்கள். எங்கள் பிரதமர், நீதிமன்றத்தை எதிர்த்து தமிழ்நாடு மக்களுக்காக அதை மீண்டும் பெற்றுக்கொடுத்தார்.


இவற்றின் விளைவு, தற்போது திமுக-வின் ஆக்சிஜன் சப்ளை-யுடன் ஐ.சி.யூ.-வில் இருக்கின்றீர்கள். புதுச்சேரியில் தற்போது நாங்கள் ஆட்சியிலும் இருக்கிறோம். பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு எங்களது நன்றி. இதுவே எங்களின் மாபெரும் வெற்றிதான். அடுத்தது எங்களின் இலக்கு, தமிழகம்தான். தமிழக மக்கள் பாஜக மற்றும் பிரதமருடன் இருக்கின்றனர்.

 

வரலாற்றை மறக்காதீர்கள். அதையே நீங்கள் மீண்டும் செய்தால், கண்டிக்கப்படுவீர்கள். அமேதியில் நடந்ததை போல. அடுத்து ஒரு முறை நீங்கள் செயற்கையாக இப்படி ஒரு பிரச்னையை உருவாக்கி அதன் பின்னால் செல்லும்வரை, இப்போதைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்