ADVERTISEMENT

கர்நாடக தேர்தல் களத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக

09:33 PM Apr 27, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவமோகா நகரில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில், அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாதியில் நிறுத்தி கன்னட வாழ்த்துப் பாடலைப் பாட வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சிவமோகா தமிழ்ச் சங்கம் புலம்பெயர்ந்த கன்னட தமிழர்கள் இடையே பிரபலமான தமிழ்ச் சங்கமாகத் திகழ்ந்து வருகிறது. இதனிடையே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சாரக் கூட்டம் பாஜக கட்சி சார்பில் இன்று நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியவுடன் அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடிக்கொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான தமிழர்கள் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். மேலும் மேடையிலிருந்த தலைவர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர்‌.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக குறுக்கிட்டு, பாடிக்கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாதியில் நிறுத்த வைத்தார். பின்பு பெண்கள் யாராவது இங்கு வந்து கன்னட வாழ்த்துப் பாடலைப் பாடும்படி அவர் வலியுறுத்திய நிலையில், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழர்கள் ஒலிபெருக்கி மூலமாகக் கன்னட வாழ்த்துப் பாடலை பாட வைத்தனர். தேர்தல் களத்தில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்க வந்த பாஜக கட்சித் தலைவர்கள், குறிப்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT