Skip to main content

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பா.ஜ.க அரசு! ஜால்ரா அடிக்கும் மாநில அரசு! - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018


பா.ஜ.க மாநில தலைவரின் செயல்: “சகிப்புத்தன்மையே உன் விலை என்ன?” என்று கேள்வி கேட்பது போல் அமைந்து விட்டது” “கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் மத்திய பா.ஜ.க அரசும், அதற்கு ஜால்ரா அடிக்கும் அடிமை ஆட்சி மாநிலத்திலும் நீடிப்பது வேதனையளிக்கிறது - மாணவி சோபியா மீதான வழக்கை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாசிச பா.ஜ.க அரசு ஒழிக” என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, ஆராய்ச்சி மாணவி சோபியா மீது போலீசிடம் புகாரளித்து, சோபியாவை அவசர அவசரமாக கைது செய்ததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் ஓர் ஆட்சி ஒழிக என்று கூறுவதற்கு கூட உரிமையில்லை என்ற நிலை பா.ஜ.க மத்தியில் ஆட்சியிலிருப்பதாலும், மாநிலத்தில் பா.ஜ.க.விற்கு ஜால்ரா அடிக்கும் அடிமை ஆட்சி நீடிப்பதாலும் உருவாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. “மாற்றுக் கருத்து தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பாதுகாப்பு வால்வு (safety valve)” என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து ஒரு வாரம் கூட ஆவதற்குள் தமிழகத்தில் இப்படியொரு அராஜகமான, அத்துமீறிய கைதை தமிழக காவல்துறை அரங்கேற்றியது “காவி மயத்திற்கு” சில காவல்துறை அதிகாரிகளும் அடி பணிந்து கிடக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு மதவெறியர்களால் அச்சுறுத்தல் என்றால் காவல்துறை கண்டு கொள்வதில்லை. அரசியல் நாகரீகமற்ற வகையில் அருவருக்கத்தக்க கருத்துகளை தெரிவித்த எஸ்.வி.சேகரை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டும் கைது செய்யவில்லை. வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், மத துவேஷத்தைப் பரப்பும் கருத்துகளையும், தினமும் தெரிவிக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த எச் ராஜா மீது புகார் கொடுத்தால் வழக்குப் பதிவு செய்யவே நீதிமன்றத்தில் ஆணை பெற வேண்டியதிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பற்றி பா.ஜ.க. வினரும், அக்கட்சியின் துணை அமைப்புகளில் இருப்போரும், சமூக வலைதளங்களில் வெளியிடும் மிரட்டல் கருத்துக்களுக்கும், சினிமா துறையில் இருப்போரை அச்சுறுத்தும் வகையில் போராடுவோர் மீதும், தமிழக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆனால், “முழக்கமிட்டார்” என்ற ஒரே காரணத்துக்காக விமான நிலையத்திலேயே புகாரைப் பெற்றுக்கொண்டு, அங்கேயே மாணவி சோபியாவை கைது செய்தது காவல்துறையின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தைக் காட்டுகிறது. மாணவியை கைது செய்யத் தூண்டியது மட்டுமின்றி, அந்த மாணவியை தன் கட்சிக்காரர்களை வைத்தே மிரட்ட வைத்து அநாகரிகமாகப் பேசியதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழகத்தில் தங்களின் பினாமி அ.தி.மு.க அரசு பதவியில் நீடிப்பதால் எந்த அராஜகங்களிலும் ஈடுபடலாம், எந்த அரங்கத்திலும் கலாட்டா செய்யலாம், வன்முறை கருத்துக்களை எங்கும் விதைக்கலாம் என்று நினைத்து, சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க.வினரும், அவர்களின் துணை அமைப்பில் உள்ளவர்களும் திட்டமிட்டு செயல்படுவது, தமிழகத்தில் நிலவும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்பதை பா.ஜ.க. மாநில தலைவரோ, அக்கட்சியில் வெறுப்புப் பேச்சுக்களை பேசுவோரோ உணரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனநாயக நாட்டில் “பா.ஜ.க. ஆட்சி” மட்டுமல்ல, எந்தக் கட்சியின் ஆட்சி மீதும் விமர்சனம் செய்யும் அடிப்படை உரிமை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அந்த சுதந்திரத்திற்கும் வேட்டு வைக்கும் வகையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் செயல்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீதும், கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறுவதிலும் நம்பிக்கையிழந்து, “சகிப்புத்தன்மையே உன் விலை என்ன?” என்று கேள்வி கேட்பது போல் அமைந்து விட்டது. மாணவியின் உணர்வுகளை புரிந்து கொள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மறுத்து, சட்டத்தைக்காட்டி மிரட்டுவதின் மூலம் அடக்க நினைப்பது அபாயகரமான போக்கு என்றே கருதுகிறேன்.

இந்நிலையில் நீதித்துறை, மாணவி சோபியாவிற்கு ஜாமீன் அளித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவி மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று, மாணவி சோபியா தனது ஆராய்ச்சிப் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். மாணவி சோபியாவிற்கு மிரட்டல் விடுத்து அநாகரிகமாக பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினர் மீது அவரது தந்தை அளித்துள்ள புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனடியாக கைது செய்து, இது போன்று வெறுப்பு விதைகளை விதைக்கும் பா.ஜ.க.வினரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.