Skip to main content

தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை கொடுக்க இருக்கும் பாஜக

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

BJP is going to give a white paper to the Tamil Nadu government

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர்கள் வசிக்கும் பகுதியான எக்கியர் குப்பம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரில் மெத்தனால் விற்பனை செய்த அம்மாவாசை, மரக்காணத்தில் மெத்தனால் விற்பனை செய்த அமரன் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 13 பேர் மீது தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. 

 

இதன் பின் ஓரிரு தினங்கள் முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், “தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பாஜக சார்பில் வரும் 20 ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

 

அந்த போராட்டம் இன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்னும் ஒரு 10 நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு பாஜக சார்பில் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறோம். அந்த வெள்ளை அறிக்கையில், எப்படி டாஸ்மாக்கை மூன்று ஆண்டுகளில் வரைமுறைப்படுத்துவது; எப்படி அதை குறைப்பது; ஒவ்வொரு வருடமும் 44 ஆயிரம் கோடி வருமானம் இருக்கிறது; அரசுக்கு துண்டு விழக்கூடிய வருமானத்தை எப்படி உயர்த்துவது; வேறு எங்கெல்லாம் அந்த வருமானத்தை அரசு ஈட்ட முடியும் என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக கொடுக்கப் போகிறோம். அந்த அறிக்கையை உயரதிகாரிகளுடம் ஆலோசனை நடத்தி சரி பாருங்க. கண்டிப்பாக டாஸ்மாக்கை குறைக்க முடியும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்