BJP dropped candidate from Vellore due to lack of candidates in Chidambaram constituency

Advertisment

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி போட்டியிடுகிறார். அதே போல் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் சரியான ஆள் இல்லாததால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதபடுத்தி வந்தனர்.சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடபட்டியல் சமூகத்தில் சரியான ஆள் இல்லை என, வேலூரில் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினியைவெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர். இது கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர் வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர். தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர்.

Advertisment

பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவ பொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும், உருவ பொம்மையை கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின் பாஜகவில் சேர்ந்தார்.

பாஜகவுக்கு உள்ளூரில் ஒரு பட்டியலின வேட்பாளர் கிடைக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலையின் சிபாரிசால் வேலூர் தொகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார் என்றும் அதே நேரத்தில் சிதம்பரம் பாரளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய கடலூர். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக பாடுபட்ட எவ்வளவோ உறுப்பினர்கள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் தமிழக பாஜக தலைமை ஏதோ கணக்கு போட்டு அறிவித்துள்ளது. இருப்பினும் தலைமையின் கணக்கு இங்கு செல்லாது என கட்சியினர் மத்தியில் அரச புரசலாக பேசப்பட்டு வருகிறதாம்.