ADVERTISEMENT

பா.ஜ.க. முற்றுகை போராட்டம்!  அட்ஜஸ்ட்மென்ட் ஆர்ப்பாட்டமாக மாறிய கதை!  

11:13 AM Sep 11, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியையும், அப்போது அமைதியாக இருந்த அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலகச் சொல்லி பாஜக சார்பில், இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த மாதம் 11-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.

அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடக்கும் என பாஜகவினர் எதிர்பார்த்தனர். ஆனால், முற்றுகைப் போராட்டத்தை, கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றியிருக்கிறார் அண்ணாமலை. வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது பற்றி விசாரித்தபோது, ‘பொதுவாக முற்றுகைப் போராட்டம்னு அரசியல் கட்சிகள் அறிவிக்கும். ஆனால், இத்தகைய போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி கொடுக்க மாட்டார்கள். அதனால், தடையை மீறி முற்றுகையிட முயற்சிப்பர். போலீசார் கைது செய்வர். அதேபோல, முற்றுகையிடும் போராட்டம் அண்ணாமலை அறிவித்த பிறகு, அந்த போராட்டத்திற்கு அனுமதி பெற, பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், சென்னை கோட்டப் பொறுப்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் காவல் துறையினரை அணுகினர். அனுமதி கிடைக்கவில்லை.

வள்ளுவர் கோட்டத்தில் வேண்டுமானால் ஆர்ப்பாட்டம் செய்து கொள்ளுங்கள் என ஸ்ட்ரிக்டாக தெரிவித்துவிட்டது காவல்துறை. இதை கேசவ விநாயகமும் கரு.நாகராஜனும் அப்படியே ஏற்றுக்கொண்டனர். காவல்துறையினருடன் எந்த வாக்குவாதமும் இவர்கள் செய்யவில்லை. 'முற்றுகைக்கெல்லாம் அனுமதி தரமுடியாது; ஆர்ப்பாட்டம் செஞ்சுக்கோங்க' என போலீஸ் சொன்னதை அண்ணாமலையும் ஒப்புக்கொண்டு விட்டார். அதனால், முற்றுகைப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. அண்ணாமலையில் இருந்து கரு.நாகராஜன் வரை எல்லோரும் வாய்ச் சொல்லில்தான் வீரர்களாக இருக்கிறார்கள்’ என்று ஆதங்கப்பட்டனர் பாஜகவினர்.

போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘முற்றுகைப் போராட்டத்துக்கு அனுமதிக்க முடியாது. மீறி நீங்கள் நடத்தினால் எல்லோரையும் கைது செய்து ரிமாண்ட் செய்து விடுவோம். காலையில் கைது செய்து மாலையில் விட்டுவிடுவோம் என்பதெல்லாம் இனி கிடையாது என பாஜக நிர்வாகிகளிடம் எங்கள் அதிகாரிகள் கடுமையாகச் சொல்லிவிட்டனர். ரிமாண்ட் என்றதுமே பாஜகவினருக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது. ஜெயிலுக்குள் இருக்க அவர்கள் தயாராக இல்லை.

இதனை மனதில் வைத்துக்கொண்டு போலீசாரிடம் பேசிய பாஜக நிர்வாகிகள், 'போராட்டத்தை அண்ணாமலை அறிவிச்சிட்டதினால குறிப்பிட்ட நாளில் நடக்க வேண்டும் சார். அதற்கு ஏதேனும் மாற்று வழி இருக்கான்னு கொஞ்சம் பாருங்க சார்' என கேட்டனர். அதில் மனமிறங்கிய எங்கள் அதிகாரிகள், 'வேண்டுமானால் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கோங்க' என பெரிய மனுசு பண்ணி அனுமதி கொடுத்தனர். இதுதான் வள்ளுவர் கோட்டத்துக்கு மாறிய கதை! ஆக, ஒரு அட்ஜெஸ்மெண்ட் ஆர்ப்பாட்டமாக இது நடக்கிறது’ என்று விவரித்தனர் போலீசார்.

இதற்கிடையே, முற்றுகைப் போராட்டத்தை அட்ஜஸ்ட்மென்ட் ஆர்ப்பாட்டமாக மாற்றிய அண்ணாமலையை சோசியல் மீடியாக்களில் கிண்டலடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT