ADVERTISEMENT

பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம்? - சிவசேனா எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு!

06:38 PM Mar 07, 2024 | prabukumar@nak…

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் பா.ஜ.க. கூட்டணியில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரசை உடைத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த அஜித் பவார் தரப்புக்கும் சொற்ப தொகுதிகளை ஒதுக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதாவது 18 மக்களவைத் தொகுதிகளைக் கேட்கும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு வெறும் 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க பா.ஜ.க. முன்வந்திருப்பதால் தேசியவாத காங்கிரசார் அதிருப்தியில் உள்ளனர். அதேபோன்று ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தரப்புக்கு 8 முதல் 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என பா.ஜ.க. தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஷிண்டே தலைமையில் செயல்படுவதே சிவசேனா என இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவிடம் 13 நாடாளுமன்ற எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கையிலான தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்ற ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பா.ஜ.க. மீது அதன் கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடும் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில் பா.ஜ.க.வை குற்றம்சாட்டி சிவசேனா எம்.எல்.ஏ. ராமதாஸ் கதம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பா.ஜ.க.வை நம்பி வந்த எங்களுக்கு (சிவசேனா கட்சிக்கு) துரோகம் இழைக்கப்படுகிறது. சிவசேனா கட்சியை ஒழிக்க நினைத்தால் பா.ஜ.க.வுக்கு மக்கள் எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT