Skip to main content

“அ.தி.மு.க.வை உடைத்தது பா.ஜ.க..” - உண்மையை உடைத்த கோகுல இந்திரா 

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

"BJP broke ADMK." - Gokula Indira broke the truth

 

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவு எனக் கடந்த 25ம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அறிவிப்பும் வெளியானது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து இந்தக் கூட்டணி முறிவைக் கொண்டாடினார்கள். 

 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா, “நாங்கள் அவர்களை ஒட்டி வைக்கவில்லை என்றால் இன்றைக்கு அது நெல்லிக்காய் மூட்டை தான். எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்ததற்கு பா.ஜ.க கட்சி தான் காரணம். பா.ஜ.க இல்லையென்றால் இன்றைக்கு இருக்கிற அதிமுக கட்சியே கிடையாது” என்று பேசியிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த அ.தி.மு.க. கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, “எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி எச். ராஜா, கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் நம் கூட்டணியில் காரைக்குடியில் போட்டியிட்டார். அவர், ‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்திருந்த அதிமுகவை ஒன்று சேர்த்தது நாங்கள் தான். நன்றி கெட்டவர்கள்’ என்று பேசியிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்தக் கட்சி உடைந்து, பிரிந்து, ஆணி வேராக ஆகவேண்டும் என ஆக்கியது நீங்கள். தர்மயுத்தம் நடத்த வேண்டும் எனச் சொல்லி கொடுத்தது நீங்கள். மீண்டும் ஒன்று சேர்ப்பது போல் சேர்க்க வேண்டும் என நினைத்து நீங்கள் இதையெல்லாம் பேச ஆரம்பித்தால் அது பெரிய கதையாக போய்விடும். 

 

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதை தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. அடிமட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்க முடியாத ஒரு சூழ்நிலைதான் இருந்து வந்தது. 1956ல் அண்ணாமலையின் அப்பா அம்மாவுக்குக் கூட திருமணம் நடந்திருக்காது. ஆனால், அன்று நடந்தது என நடக்காத ஒரு சம்பவத்தைச் சொல்கிறார். இந்த அரவேக்காட்டுத் தனத்தை நாம் ஏற்க முடியுமா. நாங்கள் உங்களை சுமந்தது போதும்; நாங்கள் உங்களை இறக்கி வைத்துவிட்டோம். உங்க வழியை நீங்கள் பாருங்கள். எங்க வழியை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் தொண்டர் பலத்தை இனி தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்