Advertisment

“பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

BJP is the biggest threat to India Chief Minister MK Stalin

Advertisment

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்தார்.

Advertisment

முன்னதாக ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.

Maharashtra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe