Skip to main content

“பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி” - கே.பி.ராமலிங்கம் 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
BJp Alliance is in leadership KP Ramalingam

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அதோடு அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கூட்டணி குறித்து தெரிவிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இனி மாநிலக் கட்சிகள் தலைமையில் கூட்டணி இல்லை. இங்குள்ள மாநில கட்சிகள்தான் தேசிய கட்சிகளின் மீது ஏறி சவாரி செய்கின்றன. அங்கு எவ்வளவு சீட்?; இங்கு எவ்வளவு சீட்? என ஒரு சில கட்சிகள் இருபுறமும் கூட்டணி பேரத்தை பேசி வருகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும் அங்கு பேரத்தை முடித்து விட்டு வரட்டும். பிரதமர் மோடி தலைமையை ஏற்றால் கூட்டணி குறித்து பேசுவோம்.  பிற கட்சிகளை அவர்களின் சின்னங்களில் போட்டியிட வைத்து அங்கீகாரம் பெற்றுத்தரும் இடத்தில் பாஜக இல்லை. அடுத்த கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர பாஜக உழைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க. கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்