
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் தமிழகம் வந்திருந்த அமித்ஷா அதிமுக-பாஜக கூட்டணியை அறிவித்திருந்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட தீவிர பணிகளில் அதிமுக இறங்கியுள்ளது. கடந்த 25/04/2025 அன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் மே இரண்டாம் தேதி அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (02/05/2025) தற்பொழுது அதிமுக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.
வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களின் மொபைல் போன்கள் அனைத்தும் வெளியே வாங்கி வைக்கப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பாஜக- அதிமுக கூட்டணி மீண்டும் அமைந்த பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் இதில் சில முக்கிய முடிவுகளை அதிமுக எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்களை அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மக்களிடம், மாணவர்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாததற்கு கண்டனம்; இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம்; அதிமுக மதசார்பற்ற மக்கள் இயக்கம்; பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல்; பஹல்காம் தாக்குதலில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு; கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு அதை மீட்பதாக நாடகம் ஆடும் திமுகவிற்கு கண்டனம்;
அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க தொடர் நடவடிக்கைகளை எடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு; மக்களின் கோபத்தை மறைக்க மொழிக் கொள்கை; கல்விக் கொள்கை என நாடகம் ஆடும் திமுகவிற்கு கண்டனம்; மக்களிடம் நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம்; சொத்துவரி முதல் குப்பை வரி வரை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டனம்; அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்; கொலை, கொள்ளை என தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய திமுக அரசுக்கு கண்டனம்; மக்கள் நலனை புறந்தள்ளி சுய விளம்பர போட்டோ சூட் நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல் 'பொது எதிரியான திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளை திரட்டும் அதிமுக திட்டத்திற்கும்; அதிமுகவின் மெகா கூட்டணியின் தொடக்கமாக பாஜக உடன் வெற்றி கூட்டணி அமைத்தற்கும் இக்குழு முழு மனதுடன் ஆதரவு அளித்து, அங்கீகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி வியூகம் அமைக்கும் வகையில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்ததற்கு எடப்பாடி பழனிசாமியை பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.