ADVERTISEMENT

'பீகார் போல தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்' - திருமா வலியுறுத்தல்

07:51 AM Oct 03, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு நேற்று (02.10.2023) வெளியிட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 பேர் ஆவர். இவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் பொது பிரிவினர் (GEN) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 15.52% ஆகும். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (BC) சேர்ந்தவர்கள். இது மொத்த மக்கள் தொகையில் 27.12% ஆகும்.

மேலும் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (EBC) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 36.01% ஆகும். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (SC) பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 19.65% ஆகும். 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் (ST) ஆவர். இது மொத்த மக்கள் தொகையில் 1.68% ஆகும். பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இப்பொழுது வெளியாகி உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் 36 % பிற்படுத்தப்பட்டோர் 27 % பட்டியல் சமூகத்தவர் 20% பழங்குடியினர் 1.6 % இருப்பது தெரியவந்துள்ளது. பொதுப் பிரிவினர் 15.5 % மட்டுமே இருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது பீகாரில் பட்டியல் சமூகத்திற்கு 16 % பழங்குடியினருக்கு 1% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 12% பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.63 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீத இடத்தை மட்டுமே இப்போது பெறுகின்றனர். 15.5% உள்ள பொதுப் பிரிவினர் 50% இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இது மாபெரும் சமூக அநீதியாகும்.

எஸ்சி - எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாலும் 50% உச்சவரம்பு விதிக்கப்பட்டதால் அவர்களுடைய இட ஒதுக்கீடும் உயர்த்தப்பட முடியாத நிலை உருவாகிவிட்டது. 10 சதவீதம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுந்தன. ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. பல்வேறு மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த முற்பட்ட போதெல்லாம் உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை குறித்த போதிய தரவுகள் இல்லை எனக்கூறி அதை நிராகரித்தது. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலுவான குரல் எழுந்தது. அதன் காரணமாகவே ஒன்றிய பாஜக அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே நடத்தாமல் ரத்து செய்துள்ளது.

உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு காட்டிய ஆர்வத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு காட்டவில்லை. ஒன்றிய பாஜக அரசு முழுக்க முழுக்க உயர் சாதியினரின் நலனைக் காப்பாற்றுவதாகவே உள்ளது என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும். இந்தச் சூழலில் வெளியாகி உள்ள பீகார் மாநில சாதிவாரி சர்வே இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அரசு நிர்வாகத்திலும், உயர்கல்வியிலும், தொடர்ந்து தாங்கள் புறக்கணிக்கப்படுவது இனிமேலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்து என்கிற பெயரில் பாஜக - ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அரசியல் உயர் சாதியினரின் நலனுக்கானது தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

ஒன்றிய பாஜக அரசு இனிமேலும் சாக்குப் போக்கு சொல்லாமல் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அளிக்கும் விதமாக எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும்.

பீகார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப 21% ஆக உயர்த்த வேண்டும். பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும்; தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT