Bihar Chief Minister Nitish Kumar resigns

Advertisment

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் சில முரண்பாடு இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. மேலும் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் பீகாரில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை இன்று காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தனது ராஜினமா கடிதத்தை அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் நிதிஷ்குமாரின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.மேலும் பாஜக கூட்டணிக்கு நிதிஷ் குமார் மாறி பாஜக ஆதரவுடன் இன்றைய தினமே முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று காலையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க நிதிஷ் குமாருக்கு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அறிவித்திருந்தனர்.

முன்னதாக இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர். அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.