ADVERTISEMENT

“திமுக தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம்” - அமைச்சர் பிடிஆர்

04:46 PM Apr 26, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்கள் முன்பு, தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ உண்மையாகவே பிடிஆர் பேசியதுதானா? என்ற கேள்விகள் எழுந்தன. மறுபுறம் திமுக ஆதரவாளர்கள், இது சித்தரிக்கப்பட்ட ஆடியோ என்று கூறி வந்தனர். தொடர்ந்து பிடிஆர், அண்ணாமலை முதன்முதலாக வெளியிட்ட ஆடியோவிற்கு, கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதில் அந்த ஆடியோ குறித்து ஆய்வு செய்த ஃபாரன்சிக் ஆதாரங்களையும் இணைத்திருந்தார். மேலும் அந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இதன் பின் அண்ணாமலை பாஜக குறித்து தவறாக பேசுவது போலவும் ஆடியோக்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் அண்ணாமலை நேற்று மீண்டும் பிடிஆர் பேசுவது போல் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவிற்கு பிடிஆர் இன்று தனது ட்விட்டர் பதிவில் காணொளி வாயிலாக விளக்கம் கொடுத்திருந்தார். அந்த காணொளியில் ஒபாமா, ட்ரெம்ப் போன்ற உலகத் தலைவர்களின் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை எடுத்துக்காட்டுகளாக காட்டியிருந்தார். இந்நிலையில் ஆடியோவிற்கு மறுப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும், எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைப்பேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாகக் கூற விரும்புகிறேன். இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநிலத் தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் உயரிய இலக்குகளை அடைய மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இவை கடந்த பத்தாண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும். இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியும். இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.

அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்? திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்? நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.

தி.மு.கழகம் தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT