ADVERTISEMENT

ஒரு நாள் எங்களோடு ஆய்வுக்கு வர தயாரா? அமைச்சர் தங்கமணிக்கு ஈஸ்வரன் சவால்

03:07 PM Nov 02, 2020 | rajavel

ADVERTISEMENT

நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் இடிந்ததற்கு தரம் குறைவே காரணம். நாமக்கல் மாவட்டத்தில் தரம் குறைவாக நடக்கின்ற கட்டுமான பணிகளை இல்லையென்று மறுக்கின்ற அமைச்சர் தங்கமணி ஒரு நாள் எங்களோடு தன் சொந்த தொகுதியில் ஆய்வுக்கு வர தயாரா? என சவால் விட்டுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் தருவாயிலேயே இடிந்து விழுந்திருப்பது அரசு கட்டிடங்கள் கட்டப்படும் தரத்தை எடுத்துரைக்கிறது. மக்கள் உயிர்காக்கும் மருத்துவமனையினுடைய கட்டிடமே இடிந்து விழுந்து பல பேருக்கு காயத்தை ஏற்படுத்தி இருப்பது வேதனையளிக்கிறது.

இந்த உண்மையை மறைத்து அமைச்சர் தங்கமணி அவர்கள் தரம் குறைவாக இருந்ததால் நாங்களே இடித்துவிட்டோம் என்று சொல்லியிருப்பதை நாமக்கல் மக்கள் நகைச்சுவை கலந்த வேடிக்கையாக பார்க்கிறார்கள். கான்கிரீட் போடும்போது அதை தாங்கி பிடிக்கின்ற சாரம் சரியாக அமைக்கப்படாததன் காரணமாக இடிந்து விழுந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒப்பந்தக்காரரின் பொறியாளர்கள் மற்றும் அரசு பொறியாளர்களுடைய கவனக்குறைவே இதற்கான காரணம்.

அமைச்சர் சப்பைக்கட்டு கட்டுவதை விட்டுவிட்டு கவனக்குறைவான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதற்கு பிறகு நடக்கின்ற பணிகளிலாவது கவனத்தோடு அவர்கள் இருப்பார்கள்.

இந்த கட்டிடத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து தொடர் ஆய்வுகளை செய்து வந்த நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் தரம் குறைவாக நடக்கின்ற பணிகளை பற்றியும், திறமை வாய்ந்த பொறியாளர்கள் இல்லாததை பற்றியும் பலமுறை புகார் அளித்தும், முதலமைச்சர் வரை கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்க முடியும். நாமக்கல் மாவட்டத்தில் போடப்படுகின்ற பல ஊராட்சி சாலைகள், அரசு கட்டிடங்கள், உயர்நிலை தண்ணீர் தொட்டிகள், மதில் சுவர்கள், கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்தும் தரம் குறைவாக கட்டப்படுகின்றன. தொடர்ந்து நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.


தரம் குறைவான அனைத்து பணிகளும் சரி செய்யப்படவில்லை என்று சொன்னால் நாமக்கல் மாவட்ட மக்கள் விடமாட்டார்கள் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மத்திய, மாநில அரசுகளுடைய நிதி என்பது மக்களுடைய வரிப்பணம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய, மாநில அரசின் திட்டங்களை ஆய்வு செய்து தரத்தை பார்ப்பதற்கு உரிமை இருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மணல் கொள்ளை நடக்கிறது அரசு தடுக்க வேண்டுமென்று நாங்கள் சொன்ன போது அமைச்சர் தங்கமணி மறுத்தார். மணலை கடத்துகின்ற லாரிகளை ஆங்காங்கே பிடித்து அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்து நிரூபித்தோம்.

டாஸ்மாக் கடைகளில் தவறுகள் நடக்கிறது என்று சொன்ன போது அமைச்சர் அதையும் மறுத்தார். கையும் களவுமாக பிடித்து அரசு உயர் அதிகாரிகளிடம் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒப்படைத்து நிரூபித்தார். நாட்டு சர்க்கரை, குண்டு வெல்லம் தயாரிக்கின்ற ஆலைகளில் அஸ்கா சர்க்கரை முழுமையாக கலந்து கலப்பட வெல்லம் தயாரிப்பதன் மூலம் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதேசமயம் மக்கள் நாட்டு வெல்லம் என்று நம்பி வாங்கி ஏமாந்து போகிறார்கள். இதை தடுக்க வேண்டுமென்று எடுத்து சொன்னால் அமைச்சர் நாமக்கல் மாவட்டத்தில் தவறுகளே நடக்கவில்லை என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரோடு ஒரு குழு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு கலப்பட வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும், சட்டவிரோதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பிடித்து வழக்கு போட செய்தார்கள்.

இப்போது அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தில் நடக்கின்ற சாலைகள், கட்டிடங்கள் போன்ற அரசு திட்ட பணிகள் தரத்தோடு நடைபெறுவதாகவும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் பொய் குற்றச்சாட்டை கூறுகிறார் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் இனி தரம் குறைவான பணிகளை நீங்கள் செய்ய முடியாது. மாற வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. நாமக்கல் மாவட்டம் முழுவதும் முறைப்படி இல்லாமல் தரம் குறைவாக நடக்கின்ற அரசு திட்டங்களை நாங்கள் நிரூபிக்க முடியும்.

அமைச்சர் தங்கமணி அவர்கள் தன்னுடைய சொந்த சட்டமன்ற தொகுதியில் நடக்கின்ற தரம் குறைவான அரசு திட்டங்களை சரி செய்ய வேண்டும். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு நாள் நடந்த ஆய்வில் 28 அரசு திட்டங்கள் தரம் குறைவாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை அமைச்சர் இல்லையென்று மறுத்தால் அவருடைய தொகுதியில் ஒரு நாள் எங்களோடு அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்கு வர தயாரா ?. என சவால் விட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT