Skip to main content

"ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும்" - ஜி.கே.வாசன்

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

ban online game request gk vasan press meet

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப்  பேசும்போது, "நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பணபலம் மற்றும் படைபலம் இருந்த போதிலும் அதிமுக, பாஜக கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக 44000‌ ஓட்டுகள் வாங்கியுள்ளது. வாக்காளர்கள் அதிமுக தலைமைக்கு வாக்களிக்கத் தயார் நிலையில் இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியாளர் அமைய வேண்டும். அந்த நிலையிலே தான் நாம் நம்முடைய பணிகளை கூட்டணிக் கட்சிகள் எல்லாம் செய்ய வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அது போன்ற பணிகள் செய்வதற்கு தமிழகத்தில் நிறைய இருக்கிறது. அந்தப் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்.

 

அதிமுக, பாஜக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இதைத்தான் தமாகா கருதுகிறது. இந்த தேர்தல் மிகவும் அற்புதமான தேர்தல். இதுபோல் பார்க்க முடியாது. வரலாறு காணாத அளவு செலவு செய்துள்ளனர். மக்களை பட்டியில் அடைத்து வைத்து ஆட்சியாளர்கள் தேர்தல் வேலை செய்தனர்.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஆட்சியைக் கலைக்க சதி செய்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். வடமாநிலத் தொழிலாளர்கள் விஷயத்தில் உளவுத்துறை மிகவும் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஏன் இப்போது பதற்றம் அடைகின்றனர். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மகளிர் தினத்தில் மத்திய மாநில அரசுகள் மகளிருக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவை. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும். சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்ட திட்டங்கள் கொண்டு வந்து மத்திய மாநில அரசுகள் அதனை தடை செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற முடியும்" என்று  கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“15 நாட்களில் 5 பேர் தற்கொலை; இனியாவது நடவடிக்கை வேண்டும்” - அன்புமணி

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Supreme Court should stay High Court verdict in online gambling case

ஆன்லைன் ரம்மியால் 15 நாட்களில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழக அரசு இனியாவது விழித்து மக்களைக் காக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர்  மாவட்ட சுவாமிமலையில்  உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த  மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர்  ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால்  ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் ரம்மி என்பது ஆக்டபசின்  கரங்களைப் போல, அதை விளையாடத் தொடங்குபவர்களைச் சுற்றி வளைக்கக் கூடியது என்பதற்கு தினசீலனின்  செயல்கள் தான் எடுத்துக்காட்டு ஆகும்.  மயிலாடுதுறையில்  நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மியில்  தினசீலன் இழந்துள்ளார். பணத்தைக் கடனாகக் கொடுத்தவர்கள், அந்த பணத்தை திரும்பக் கேட்டதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து  தினசீலனின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானம் பேசி தினசீலனை மீட்டுள்ளனர். அதன்பின்னர்  அவரை சில மாதங்களுக்கு முன் சுவாமிமலையில் தங்கும் விடுதியில் பணியில் சேர்த்துள்ளனர்.  ஆனால், அங்கும் விடுதியின் வருமானத்தை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்துள்ளார். அதன் பிறகு மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்குப் பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகு மிகவும் அரிதாக  நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது தொடர்கதையாகி  விட்டன. கடந்த மே 14-ஆம் தேதி  முதல்  மே 29 வரையிலான  15  நாட்களில்  5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால்  ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத்  தடுக்க முடியாது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்குப் பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 6  மாதங்களில் மொத்தம் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.   அவர்களில்  பாதிப் பேர், அதாவது  6 பேர்  கடந்த மாதம் 29-ஆம் தேதிக்கும்,   மே  மாதம் 29-ஆம் தேதிக்கும்  இடைப்பட்ட  ஒரு மாதத்தில்  தற்கொலை செய்து  கொண்டுள்ளனர்  என்பதிலிருந்தே  ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் எவ்வளவு  வேகமாக அதிகரித்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆன்லைன் சூதாட்ட  தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த  நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.  ஒவ்வொரு தற்கொலையின் போதும்  ஆன்லைன் சூதாட்டத்தைத்  தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன்  சூதாட்டத்திற்கு  உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்; அதன் மூலம் தற்கொலைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

9 நாட்களில் 4 பேர் தற்கொலை; இதற்கு தீர்வு என்ன? - ராமதாஸ்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Ramdoss raised a question regarding the online rummy issue

ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று  வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவாசகன் என்ற  இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால்  ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மணிவாசகனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான  மணிவாசகன்  சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். ஆனாலும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் நண்பர்கள், சக பணியாளர்கள், உறவினர்கள் போன்றோரிடமும் கடன் வாங்கி  ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் சுமை ரூ.50 லட்சத்தை தாண்டி விட்ட நிலையில், அதை எப்படி அடைப்பது? என்பது தெரியாமல்தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக  தற்கொலை கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார். மணிவாசகனின் தற்கொலையால் அவரது இளம் மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு கொடுமையானது என்பதற்கு  மணிவாசகனின் முடிவு தான் துயரமான எடுத்துக்காட்டு. சம்பாதித்த பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது மட்டுமின்றி, ரூ.50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி சூதாடும் அளவுக்கு மணிவாசகன் துணிந்திருக்கிறார் என்றால் ஆன்லைன் சூதாட்ட போதை ஒரு மனிதனை எந்த அளவுக்கு  ஆட்டுவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய கொடூரமான ஆன்லைன் சூதாட்டம் இனியும் தொடருவதை  அரசு அனுமதிக்கக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்  ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது அதிகரித்து  விட்டன. கடந்த மே 14-ஆம் தேதி  மாங்காடு சீனிவாசன், 15-ஆம் தேதி சென்னை கொருக்குப்பேட்டை மருத்துவ மாணவர் தனுஷ்குமார், மே 17-ஆம் தேதி திருப்பெரும்புதூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்  இராமையா புகலா, மே 22-ஆம் தேதி  ஓசூரில்  மணிவாசகன்  என  9 நாட்களில்  4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகளின் வேகம் இன்னும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 6  மாதங்களில் மொத்தம் 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்தத் தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த  நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.  

உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடை வாங்க முடியாது. இத்தகைய சூழலில் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?   ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் தற்கொலைகள் தொடரட்டும் என்று  வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? ஏதேனும் சிறப்பு வழிகளைக் கண்டறிந்து ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறப்போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.