
10வது ஆண்டாக இந்த ஆண்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று (24.05.2025) நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அதில் ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபுசாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். முதல்வரின் டெல்லி பயணம் குறித்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் விஜய் ஆகியோர் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

குறிப்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்' என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் குழந்தைத்தனமான அரசியல் செய்வதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடை, சுகாதார நிலையம் கிராம செயலக அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆர்.காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, ''பச்சா பொலிடிகல்'' ( Bacha political ) இது ஒரு குழந்தைத்தனமான அரசியல் என்று தெரிவித்தார்.