/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1k2_5.jpg)
கடந்த 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜுபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் சமாஜ்வாதி முன்னாள் எம்.பி. அட்டிக் அகமது மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. உத்திரப் பிரதேசத்தில் தாதாவாக இருந்து அரசியலுக்கு வந்தவர் அட்டிக் அகமது.
கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ வாக இருந்த ராஜுபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அட்டிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட போது இருவரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர்கள் போல் நின்றிருந்த இருவர் அட்டிக் மற்றும் அஷ்ரஃப் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர்.
அட்டிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் இருவரையும் சுட்டுக்கொன்ற கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாவைச் சேர்ந்த லவ்லேஷ் திவாரி (22), ஹமிர்பூரைச் சேர்ந்த மோஹித் என்ற சன்னி (23), காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அருண் மவுரியா (18) ஆகியோரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட உடனே காவல்துறை கைது செய்தது. பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தாங்கள் பெயர் எடுப்பதற்காகவே அகமது சகோதரர்களை கொன்றதாகவும், அகமது கும்பலை ஒழிப்பதன் மூலம் குற்ற உலகில் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்த விரும்புவதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அட்டிக் அகமது 9 முறை சுடப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளது. தலையில் ஒரு குண்டும், கழுத்தில் ஒரு குண்டும், மார்பில் இரண்டு குண்டுகளும், வயிறு மற்றும் கை உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் எஞ்சிய குண்டுகளும் பாய்ந்துள்ளன.அட்டிக்கின் தலையின் மேல் பகுதியில் ஒரு குண்டு பாய்ந்தது.
அதேபோல் அவரது சகோதரர் அஷ்ரஃப் உடலில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. தலையில் 2 குண்டுகளும் கழுத்தில் ஒரு குண்டும் மார்பில் ஒரு குண்டும் வயிற்றில் ஒரு குண்டும் பாய்ந்துள்ளது. பிரேதப் பரிசோதனையினை 5 மருத்துவர்கள் கொண்ட குழு நடத்தியது. உயர்மட்டக் குழுவின் விசாரணைக்காக இந்த பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)