Advertisment

“அறிக்கை தாக்கல் செய்வதை தடுக்க நடத்தப்பட்ட தாக்குதல்” - எல். இளையபெருமாளுக்கு நினைவகம் குறித்து முதல்வர் பேச்சு

“Attack carried out to prevent submission of report” – Chief Minister's speech on memorial to L. Ilaiyaperumal

சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிவடைந்த பின் அறிக்கை அளிக்கக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தனது அறிக்கையை வாசித்த முதலமைச்சர், “சமூக சீர்திருத்தவாதி இளையபெருமாள், சமூக சீர்திருத்தத்தின் பெருமை மிகு தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கின்றவர். அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர்களில் ஒருவர்தான் பெரியவர் எல்.இளையபெருமாள். சிதம்பரம் மண்ணில் பிறந்து நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்காக அடைபட்டுக் கிடந்த உரிமை வாசலைத்திறந்தவர் இளையபெருமாள். பள்ளியில் படிக்கும்போது இரட்டை பானை முறையைப் பார்க்கிறார்;பள்ளிக்குள் மறைந்திருந்து இரவு நேரத்தில் பானைகளை உடைக்கிறார் இளையபெருமாள். இப்படி அதனைத்தொடர்ச்சியாக உடைத்ததால் தான் இரட்டை பானை முறை அந்த காலத்தில் அந்த வட்டாரத்தில் நீக்கப்பட்டது.

Advertisment

பின் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கும் பாகுபாடு காட்டப்பட்டது. உடனடியாக துணிச்சலோடு உயரதிகாரிக்குப் புகார் செய்கிறார். அந்த பாகுபாடு கலையப்படுகிறது. ஓராண்டு காலத்திலேயே ராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்து விடுகிறார். ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டம், தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை நடத்தியவர் இளையபெருமாள். பட்டியல் இன மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட இவரது போராட்டம் தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இளையபெருமாள் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் 1952 ஆம் ஆண்டு கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது, வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 27.

டெல்லி சென்ற இளையபெருமாள் அண்ணல் அம்பேத்கரை சந்திக்கிறார். இவ்வளவு இளவயதில் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துள்ளீர்களே. அந்த மக்களுக்காக இதுவரை என்ன செய்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார் அம்பேத்கர். தென்னாற்காடு மாவட்டம் தஞ்சை மாவட்டங்களில், தான் நடத்திய மக்கள் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இவர் பட்டியல் போட்டுச் சொன்னதைக் கேட்டு அண்ணல் அம்பேத்கர் வியப்படைந்துள்ளார். இளையபெருமாளைப் பாராட்டியுள்ளார். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராகவும் இருந்தவர் இளையபெருமாள். அவரது பெரும் சிறப்புகளில் மிக முக்கியமானது பட்டியலின பழங்குடி மக்களின் நேர்மைக்கான 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமை பொறுப்பை அவர் வகித்தது தான்.

மூன்றாண்டுக் காலம் இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து, சாதி கட்டமைப்பையும் தீண்டாமை கொடுமையையும் ஆய்வு செய்தார். அந்த அறிக்கை இந்திய சமூக அமைப்பின் சாதிய வேர்களை மறைக்காமல் துல்லியமாக வெளிப்படுத்தும் அறிக்கையாக அமைந்தது. இந்த அறிக்கை வெளியே வருவதைத்தடுக்க சிலர் முயற்சித்தார்கள். அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று அவரது அறையில் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்து தப்பி வந்து அறிக்கையைத்தாக்கல் செய்தார் இளையபெருமாள். இப்படி நடக்கும் என்று தெரிந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியனிடம் அறிக்கையின் பிரதியைக் கொடுத்து வைத்திருந்தார் இளையபெருமாள். அதனால் தான் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையே இளைய பெருமாள் ஆணையத்தின் அறிக்கைதான்.

கலைஞர் 1971 ஆம் ஆண்டு அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு எதிராகச் சிலர் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். அப்போது திமுக தாக்கல் செய்த மனுவில், சமூக சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அளித்த அறிக்கை அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் செல்லும் என்பதற்கு ஆதாரமாக இளையபெருமாள் ஆணைய அறிக்கையை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியது. கலைஞர், இளையபெருமாள் மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தார். சிதம்பரத்தைச் சேர்ந்தவர் என்பதால் சம்மந்தி என்றுதான் அழைப்பார். 1980 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி, கலைஞர், இளையபெருமாள் மூவரும் திறந்த வெளி காரில் ஊர்வலமாகச் சென்று வாக்கு கேட்டது தமிழ்நாடு அறியும்.

1998 ஆம் ஆண்டு அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின்விருதை முதன்முதலாக இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். இந்திய மனித உரிமைகள் கட்சியின் சார்பில் சமூக நீதி மாநாட்டை இளையபெருமாள் சென்னையில் நடத்திய போது அதனைத்தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற முதலமைச்சர் கலைஞரைத்தான் இளையபெருமாள் அழைத்தார். சலிப்பேராத சமூகத் தொண்டர் என்று இளையபெருமாளை கலைஞர் பாராட்டியுள்ளார். 1924 ஆம் ஆண்டு ஜூன் 3கலைஞர் பிறந்த தினம். இளையபெருமாள் பிறந்தது1924 ஜூன் 26. இது மிக மிகப் பொருத்தமானதாக இருக்கும். அத்தகைய சமூகப் போராளியைப் போற்றுவதை அரசு தனது கடமையாகக் கருதுகிறது.

சமூக இழிவு களையப்பட வேண்டும்;சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும்;அனைத்து சமூக ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்;ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியாக அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்;சமத்துவ சுயமரியாதை உருவாக்கப்பட வேண்டும் என்று உழைத்த இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில்கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவகம் ஒன்று வைக்கப்படும் என்று தெரிவிக்கிறேன். “தீண்டாமை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணி வேரைவெட்டியாக வேண்டும் அதற்கு சாதி அமைப்பின் பிடிப்பை உடைத்தாக வேண்டும்” என்று இளையபெருமாள் வழியில் சுயமரியாதை சமதர்ம சமத்துவத்தை அமைப்போம்” எனக் கூறினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe