Skip to main content

சட்டமன்றத்தில் தோல்வி; நாடாளுமன்றத்தில் கூட்டணி? - தேவகவுடா பதில்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

assembly election loss parliamentary election alliance devegowda answer 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே எடியூரப்பா தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார்.

 

சுமார் ஒரு ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்ற நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவானது  எடியூரப்பா தலைமையிலும், அவரைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தலைமையிலும் ஆட்சி அமைத்து பாஜக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது.

 

மேலும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் அம்மாநிலம் உட்பட இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா, பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்து வருவதாகச் சில கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதனை நம்பாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று சொல்லி வருகின்றனர். நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி ஏதாவது உண்டு என்றால் தைரியமாக சொல்லட்டும் பார்க்கலாம். அதன் பின்னர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேசலாம்" என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் உடன் இருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பாஜக நிர்வாகி அஞ்சலை கைது

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nn

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர். 

nn

தொடர்ந்து பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

கொலையாளியைத் தேடிச் சென்ற மோப்ப நாய். நொடிப் பொழுதில் நடந்த திடீர் திருப்பம்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
The sniffer dog that went looking for the culprit in karnataka

கர்நாடகா மாநிலம், சன்னகிரி தாலுகா, சந்தேபென்னூர் பகுதியில் உள்ள சாலையோர பெட்ரோல் பங்க் அருகே ஆண் சடலம் ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இது குறித்து உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த எஸ்.பி உமா பிரசாந்த், பிற காவல்துறையினருடன், ‘துங்கா 2’ என்ற மோப்ப நாய் மற்றும் அதை கையாளுபவர் ஆகியரோடு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு சென்ற போது, ஆண் சடலத்தின் சட்டையை மோப்பமிட்ட துங்கா 2 என்ற மோப்ப நாய், கொலையாளி இருக்கும் இடத்தை நோக்கி ஓடியது. துங்கா 2 மற்றும் அதைக் கையாளுபவர், சுமார் 8 கி.மீ தூரம் ஓடிய பின்பு, பெரிய சத்தம் கேட்ட ஒரு வீட்டில் நாய் நின்றது. இதன் மூலம், அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், ஒரு நபர் ஒரு பெண்ணை இரக்கமின்றி அடித்து கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பெண்ணைக் கொலை செய்ய முயன்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், போலீசார் தேடி வந்த கொலையாளி அந்த நபர் தான் என்றும் அவரது பெயர் ரங்கசாமி என்றும் தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சந்தேபென்னூரைச் சேர்ந்த சந்தோஷும், ரங்கசாமியின் மனைவியும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரங்கசாமிக்கு தெரியவர, ஆத்திரமடைந்து சந்தோஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, தனது மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

அதன்படி, வீட்டிற்கு வந்த ரங்கசாமி, தனது மனைவியை அடித்து கொலை செய்யும் நேரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது தெரியவந்தது. கொலையாளியைக் கண்டுபிடிக்க மழையில் 8 கி.மீ ஓடி நொடி பொழுதில் பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய துங்கா 2 என்ற மோப்ப நாயை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.