ADVERTISEMENT

‘கவனிப்பால்’ காணாமல்போன தே.மு.தி.க. வேட்பாளர்? - அருப்புக்கோட்டை குமுறல்!

11:01 PM Apr 07, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தல் முடிந்ததும், அருப்புக்கோட்டை தொகுதியில், தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. தரப்பில், ஒருவித கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் நம்மிடம் குமுறினார்.

“எப்படியிருந்த கட்சி? இப்படி ஆயிருச்சு! எல்லாம் நேரகாலம்தான். இத்தனைக்கும்.. உடம்புக்கு முடியாத கேப்டன், இந்தத் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்தாரு. டிடிவி தினகரன் வந்தாரு. எங்க விஜயபிரபாகரனும் வந்தாரு. ஸ்டார் தலைவருங்க இவங்கள்லாம் வந்தப்ப, அப்படி ஒரு கூட்டம் கூடுச்சு. ஆனா.. எல்லாம் வீணாப் போச்சு.” என்று பெருமூச்சுவிட்டவர் “தேர்தலுக்கு நாலு நாளைக்கு முன்னால இருந்தே எங்க வேட்பாளர் ரமேஷ் காணாம போயிட்டாரு. அடுத்து ஆட்சிக்கு வர்ற கட்சி வேட்பாளர்கிட்ட விலை போயிட்டாரு. இங்கே 36 வார்டு இருக்கு. ஒரு வார்டுல கூட ரமேஷ் எட்டிப்பார்க்கல. நகர, ஒன்றியம் எதுலயும் பூத் கமிட்டி அமைக்கல. கட்சி ஆபீசுல உட்கார்ந்து தண்ணியடிச்சதுனால, பிரச்சனை பெரிசாகி பூட்டு போட்டு மூடிட்டாங்க. வேட்பாளர் அறிமுகக்கூட்டம் கூட நடத்தல. எல்லாமே குறைகளாத்தான் தெரியுது. மத்த கட்சிக்காரங்க எங்ககிட்ட, உங்க வேட்பாளர் அந்த வேட்பாளர்கிட்ட எவ்வளவு வாங்கினாரு? உங்களுக்கும் பங்கு கொடுத்தாரா? இந்த மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க. வெளிய தலைகாட்ட முடியல.” என்று வேதனைப்பட்டார்.

தே.மு.தி.க. வேட்பாளர் ரமேஷை தொடர்புகொண்டோம். “ரெண்டு முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடற தொகுதி. பொருளாதார ரீதியா நாங்க பலவீனமாத்தான் இருக்கோம். ஆனா.. உழைப்புல குறை சொல்ல முடியாது. தண்ணியடிச்சு கட்சி ஆபீசு பூட்டினதுக்கு நானா காரணம்? டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாதுன்னு நான் சொல்ல முடியுமா? கேப்டன் வந்தப்ப எவ்வளவு கூட்டம் வந்துச்சு? நயாபைசா செலவில்லாம, தலைவருக்காக வந்த கூட்டம். டிடிவி தினகரன், விஜயபிரபாகரன் வந்தப்பவும் நல்ல கூட்டம். இதுக்கு மேல என்ன பண்ண முடியும்? பெரிய கட்சிங்க பூத் கமிட்டிக்கு இருபத்தஞ்சாயிரம் கூட செலவழிப்பாங்க. எங்களால எப்படி முடியும்? அந்த வேட்பாளர்கிட்ட நான் பணம் வாங்கிட்டேனா? எங்க கட்சிலயே குறை சொன்னாங்கன்னா.. நான் என்ன சொல்ல முடியும்? மொதமொதல்ல தேர்தல்ல நின்னேன். எனக்கு இது ஒரு பாடம்.” என்றார்.

கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்து, தங்கள் கட்சிகளின் வாக்கு வங்கி தேறவே தேறாது எனத் தெரிந்தும், வீரவசனம் பேசி தேர்தலில் களமாடுபவர்களிடமிருந்து, தொண்டர்கள் எப்போது ‘பாடம்’ கற்றுக்கொள்ளப் போகிறார்களோ?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT