Arunraj says I am happy to be associated with this noble cause

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த மாதம் (26 மற்றும் 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அதே சமயம் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், முக்கிய பிரமுகர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் அன்மையில் ஐ.ஆர்.எஸ். பதவியை ராஜினாமா செய்த கே.ஜி. அருண் ராஜ் இன்று (09.06.2025) சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் அருண்ராஜூக்கு அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அருண் ராஜ் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வழிகாட்டுதலின் படி கட்சியின் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டப் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பனையூரில் அருண் ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் வெற்றியைத் தாண்டி ஒரு அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக, விஜய் எடுத்திருக்கிற இந்த உன்னத பணியில் என்னை இணைத்துக் கொள்வது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது. இது வந்து சாய்ஸ் எல்லாம் இல்ல. அது பெட்டரா இது பெட்டரான்னு யோசித்து எல்லாம் நான் வரவில்லை. விஜய் எடுத்துள்ள கொள்கைப் பிடிப்பை உண்மையாக நான் இங்கு தான் பார்க்கிறேன். மற்றதெல்லாம் பேருக்குத்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர். ராஜலட்சுமி ஏ. ஸ்ரீதரன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், பிரபல கல்வி நிறுவனத்தின் தலைவர் என். மரிய வில்சன் முன்னாள் நீதிபதி சி. சுபாஷ் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க.வில் 7ஆம் கட்டமாக 6 மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கட்சியின் புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் விஜய் தெரிவித்துள்ளார். அதோடு புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தவெக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisment