Skip to main content

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரமாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்ப பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.