/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_98.jpg)
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். விசாரணையில் ஆருத்ரா நிறுவன மோசடியில் கைதான ஹரீஷ், தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தது அம்பலமாகியது. பணம் பெற்ற பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ் மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அலெக்ஸ் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாகவும், சுதாகர் ராணிப்பேட்டை பாஜக நிர்வாகியாகவும் உள்ளனர். ஹரிஸிடம் விசாரணை நடத்தியதில், மாநில பொறுப்பு பெறுவதற்காகத்தான் பாஜக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் சுதாகர் என்பவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட பாஜக நிர்வாகி அலெக்ஸ், சென்னை அசோக் நகரில் இருக்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
சுதாகரிடம் விசாரித்ததில் தான் பணம் பெற்றது உண்மை என்றும் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே நடிகரும் தயாரிப்பாளருமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 15 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அவரையும் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆருத்ரா விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளதால் மோசடியில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மைக்கேல் ராஜ் என்பவரை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை நடத்தியது. மைக்கேல் ராஜ் என்பவர் ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவனத்தில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாண்டவர் என்பது ஏற்கனவே விசாரணையில் தெரிய வந்தது. துபாய்க்கு தப்பிச் செல்லும் பொழுது இவரை கைது செய்த காவல்துறை இவரிடம் விசாரணை நடத்தியதில் ரூ.1749 கோடி ரூபாய் பொதுமக்களிடம் வாங்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது. இவர் பணம் அனுப்பியவர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்களுக்கெல்லாம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தும் பணியில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர் 200க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வசூல் செய்துகொடுத்துள்ளதாகத்தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜா செந்தாமரையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர் வசூல் செய்த பணத்தை யாரிடமெல்லாம் கொடுத்தார். என்பது போன்ற முழுமையான விசாரணையை காவல்துறை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)