ADVERTISEMENT

ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய்... அன்புமணி பேச்சு

11:10 AM May 16, 2019 | rajavel

ADVERTISEMENT

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பா.ம.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் மற்றும் கந்தம்பாளையம் பகுதியில் புதன்கிழமை இரவு நடந்தது.

ADVERTISEMENT



இதில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி உறுதியாகிவிட்டது. இதேபோல், அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருவதால் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியும் எங்களுக்கு உறுதியாகிவிட்டது.

பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தான் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. அ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி.தினகரனின் ஆசை. தான் முதல்-அமைச்சராக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆனால் எங்களது (அ.தி.மு.க. கூட்டணி) ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கியதாகத்தான் இருக்கிறது.

ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து விட்டு, கொச்சையான வார்த்தைகள் மூலம் தனி நபர் விமர்சனங்களை அவர் செய்து வருகிறார். என்னை, பாமக நிறுவனர் ராமதாஸை, முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், பிரதமர் ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரிக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.

ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார். நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை, கச்சத்தீவை தாரை வார்த்தது போன்றவை தி.மு.க. ஆட்சி காலத்திலேயே அனுமதிக்கப்பட்டது. ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்-அமைச்சராவதும் ஒருபோதும் நடக்காது. இதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகர ராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து எதிரணி மிகுந்த குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.

அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார். காவிரியில் மிகப்பெரிய பச்சை துரோகம் செய்தது தி.மு.க. ஜனாதிபதியாக ஸ்டாலினுக்கு தகுதியுள்ளது என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறுகிறார். அதுக்கு கூட அவர் தகுதியில்லை. இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT