ADVERTISEMENT

''விரும்பியோர்  12 மணி நேரம் உழைக்கலாம் என்பதும் ஒரு வகை உழைப்பு சுரண்டலே'' - கி.வீரமணி வலியுறுத்தல்

04:50 PM Apr 21, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யவில்லை. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதியளவு (118) இருந்தாலே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற நிலையில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தது மசோதா நிறைவேறக் காரணமாக அமைந்தது.

பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த சட்ட மசோதாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ''தொழிலாளர் உரிமையை பறிக்கும் சட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

12 மணி நேரம் வேலை மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது கண்டனத்திற்குரியது எனவும் இம்மசோதாவை பரிசீலனை செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். “தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8:00-லிருந்து 12 மணி நேரமா? இதனை பரிசீலனை செய்க. தொழிற்சாலைகளில் நெகிழ்வு தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல. வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நலம், குடும்ப நலன் கவனிக்கப்பட வேண்டாமா? விரும்பியோர் 12 மணி நேரம் உழைக்கலாம் என்று கூறுவது ஒரு வகை உழைப்பு சுரண்டலே. எல்லா வகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் திராவிட மாடல் அரசுக்கு ஏற்படக்கூடிய அவப்பெயரை தவிர்க்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT