
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (10.08.2021) காலைமுதல் திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இன்று காலை எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்குத் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த சோதனையானது கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் தொடங்கி, பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது.
அவரது இல்லத்தில் சோதனை நடைபெறுவதை அறிந்த ஆதரவாளர்கள், எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு திரண்டுள்ளனர். எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக, ஆளுநரிடம் ஊழல் பட்டியலை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.