ADVERTISEMENT

''வெற்றிலை பாக்கு போடுகிறீர்களா... குறை காண்பவர்களுக்கு அண்ணாவின் இந்த விளக்கமே போதும்''- மு.க.ஸ்டாலின் பேச்சு!  

12:25 PM Jan 07, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஒரு பகுதியாக முதல்வரின் பதிலுரை இருக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்வர் அவரது நன்றியுரையைத் துவங்கி பேசினார். அதில், ''அறிவித்துள்ள திட்டங்கள் குறித்தும், அரசின் கொள்கைகள் குறித்தும் ஆளுநர் ஒவ்வொன்றாக விளக்கி பாராட்டி பேசினார். அதற்காக மாநில ஆளுநருக்கு எனது நன்றி. இவையெல்லாம் எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த பாராட்டுக்கள் இல்லை இந்த அமைச்சரவைக்கே கிடைச்ச பாராட்டு, இந்த அரசின் அங்கமாக இருக்கக்கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு கிடைத்த பாராட்டு.

எங்களை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்திய மக்களுக்கு கிடைத்த பாராட்டு. அப்படிப்பட்ட உணர்வோடுதான் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். திமுக ஆளுங்கட்சியாகவும் இருந்திருக்கிறது, எதிர்கட்சியாகவும் இருந்திருக்கிறது. 4/5/1957 அன்று ஆளுநர் உரைமீது பேசிய கலைஞர், 'மேன்மை தாங்கிய கவர்னர் உரையைப்பற்றி நான் போற்றவும் வரவில்லை; தூற்றவும் வரவில்லை; எனது கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்' என்றார்.

அதே நடுநிலை தவறாத பண்பைப் பெற்றிருப்பவர்கள் நாங்கள். அதிமுக ஆட்சி காலத்தில் திமுக அரசின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் திமுக அரசின் திட்டங்களைப் புறக்கணித்ததை போன்று திமுக அரசு செயல்படாது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் மூடப்படமாட்டாது என எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 8.76 கோடி பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்.

ஆளுநர் உரையில் இது இல்லை அது இல்லை என்று குறை சொல்பவர்களுக்கு அண்ணா இதே அவையில் கொடுத்த விளக்கம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். 30/3/1967 அன்று அண்ணா ஆற்றிய உரையில், 'சில காரியங்கள் தேவையில்லை என்பதற்காக ஆளுநர் உரையில் விடப்படவில்லை. கோடிட்டுத்தான் காட்டுவார்கள். கவர்னர் உரையில் கோடிட்டுக் காட்டியதை வைத்துக்கொண்டு 'வெற்றிலை பாக்கு போடுகிறீர்களா என்று கேட்டால்' சுண்ணாம்பு இல்லாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொருளல்ல. அதற்காக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போடுகிறீர்களா என்று யாரும் கேட்பதில்லை. வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்கிறேன் என்று சொன்னால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும்தான் வரும். வெற்றிலை பாக்குதானே போட சொன்னார்கள் என்று சுண்ணாம்பை யாரும் புறந்தள்ள மாட்டார்கள். இதுபோல் கவர்னர் உரையில் அது இல்லை இது இல்லை என தள்ளிவிடலாமா? கவர்னர் உரையில் சில குறிப்பிட்ட விஷயங்கள் இருக்கும். நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டும். குறை காண்பவர்களுக்கு அண்ணாவின் இந்த விளக்கமே போதும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT