Advertisment

அண்ணாமலை VS முருகன்!-பாஜகவில் சமூகநீதி எங்கே?

 Annamalai VS Murugan! -Where is social justice in BJP?

Advertisment

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கக் கூட்டத்தின் நிறைவுநாள் பொதுக்கூட்டத்தை சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று (26/06/2022) நடத்தியது தமிழக பாஜக! இதில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், பாஜகவின் மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னையில் பாஜகவுக்கு கட்சி அமைப்பு ரீதியாக 7 மாவட்டங்கள் இருக்கிறது. இதில், 22 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். அந்த 7 மாவட்டங்களின் சார்பில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை துணைத்தலைவர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தார் அண்ணாமலை.

நிறைவு பொதுக்கூட்டம் என்பதால் 50 ஆயிரம் பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்று அண்ணாமலை சொல்லியிருந்தார். இதனால் மாநில உளவுத்துறையும், காவல்துறையும் உன்னிப்பாக கவனித்தன. ஆனால், கூட்டத்தில் வெறும் 5 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. இதனைக் கண்டு பாஜக தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சி.

Advertisment

bjp

இந்த நிலையில், கூட்டத்தில் அண்ணாமலை பேசும் வரையில் 5 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பியிருந்தன. அவர் பேசிவிட்டு அமர்ந்ததும் மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. அண்ணாமலைக்கு பிறகு மத்திய அமைச்சர் முருகன் பேசும்போது வெறும் 200 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். இதனால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் எல்லாம் காலியாகக் கிடந்தன. இந்த சம்பவம் பாஜக தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. .மேலும் பல புகைச்சல்களையும் இந்த கூட்டம் உருவாக்கியிருக்கிறது.

இது குறித்து பாஜக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, " பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடத்தினார்கள். ஒரே ஒரு மாவட்டம் இதனை ஏற்பாடு செய்தது. அதில் 4 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே அடங்கியிருந்தது. அதாவது ஒரே ஒரு மாவட்ட பாஜகவினரின் ஏற்பாட்டில் நடந்த சாதனைக் கூட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அதேபோல், நெல்லையில் நடந்த கூட்டத்திலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். ஆனால், சென்னையில் 22 தொகுதிகள் அடங்கிய 7 மாவட்டங்கள் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் வெறும் 5,000 பேர்தான் வந்தனர். இத்தனைக்கும் இந்த கூட்டம் கூட தலைக்கு 300 ரூபாயும், பிரியாணியும் கொடுத்தே அழைத்து வந்தனர். அண்ணாமலை கூறிய 50,000 பேர் எங்கே? அண்ணாமலை பேசி முடித்ததும் அந்த 5,000 பேரும் கலைந்து சென்று வெறும் 200 பேர்தான் இருந்தனர். அப்படியானால், சென்னையில் உள்ள பாஜகவின் 7 மாவட்டங்களையும் சேர்த்து பாஜகவின் வாக்கு வங்கி வெறும் 200 பேர் தான் என தெரிகிறது. மேலும், அண்ணாமலை பேசும் வரை இருந்த கூட்டம், அண்ணாமலை பேசி முடித்தும் கலைந்து போய்விட்டது. மத்திய அமைச்சர் முருகன் பேசும் போது கூட்டமே இல்லை என்றால் அண்ணாமலைக்காக கூட்டி வந்த கூட்டமா இது?

bjp

சமூக நீதியை பற்றி எங்கள் தலைவர்கள் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால், கட்சியில் அந்த சமூக நீதி இல்லை. முருகன் பேசும்போது கூட்டம் கலைந்து செல்ல அனுமதித்தது யார்? அண்ணாமலைக்காக மட்டும்தான் கூட்டம் கூட்டப்பட்டதா? கூட்டம் கலைந்து சென்றபோது அண்ணாமலையோ, கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களோ ஏன் தடுக்கவில்லை? அப்படியானால், தலைவர்களிடையே பாகுபாடு காட்டப்படுகிறது என்றுதானே அர்த்தம்? முருகன், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாகுபாடு காட்டப்படுகிறதா? ஏற்கனவே, கட்சியின் நிர்வாகிகள் நியமனத்தில் முருகனின் ஆதரவாளர்களை புறக்கணித்தார் அண்ணாமலை. முருகனின் சிபாரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இப்போது, பொதுக்கூட்டத்திலும், அண்ணாமலை பேசும் வரையில்தான் கூட்டம் இருக்க வேண்டும் என மறைமுகமாக உத்தரவுகள் போடப்படுகின்றன. இப்படிப்பட்ட அரசியல் தமிழக பாஜகவில் நடக்கும் போது, சமூக நீதியை பற்றி பாஜக தலைவர்கள் பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது " என்கிறார்கள் ஆவேசமாக.

இதற்கிடையே, இந்த கூட்டத்திற்காக 1 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் பாஜக நிர்வாகிகள் மத்தியில் புகைந்து கொண்டிருக்கிறது. இந்த புகைச்சலை தங்களின் தேசிய தலைமைக்கு புகாராகதட்டிவிட்டுள்ளனர் தமிழக பாஜகவினர்.

Annamalai politics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe