ADVERTISEMENT

''நாத்திகம் ராமசாமி போல் அண்ணாமலைக்கும் சிறை நிச்சயம்'' - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

10:53 AM May 12, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்த்திடம் அவதூறு வழக்கு தொடர்பான மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரம் இன்றி தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை அண்ணாமலை கூறியதாக அந்த மனுவில் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, “திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் முன்னோடிகள் மீது ஏப்ரல் 16 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அவர் பேட்டி அளித்த அரை மணி நேரத்திற்குள் அவருக்கு திமுக சார்பில் நாங்கள் பதில் தந்து விட்டோம்.

அந்தக் கூட்டத்தில் அவர் சொன்ன அந்த அவதூறான வாசகங்களை திரும்பப் பெற வேண்டும்; மன்னிப்பு கூற வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பி ஏறத்தாழ ஒரு மாதக் காலம் ஆகியும் இதுவரை பதில் சொல்லவில்லை. அறிக்கை விடுகிறார். ஆனால், லீகல் நோட்டீஸ் வரவில்லை. ஆகவே ஒரு மாதக் காலம் அவருக்கு போதுமான அவகாசம் கொடுத்த பிறகும் அவர் மன்னிப்பு கேட்காததாலும், சொன்ன வாசகங்களை திரும்பப் பெறாததாலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுகவிற்கு யார் மீதும் பொய் வழக்கு போடும் வழக்கம் கிடையாது. அதோடு மட்டுமல்ல, திமுக சார்பில் போட்ட அத்தனை வழக்குகளிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பது வரலாறு. இதேபோல் தான் 1962-63 இல் அன்றைய பொருளாளர் கலைஞர் மீது, கட்சி பணத்தை எடுத்து 'பூம்புகார்' என்ற படத்தை எடுத்தார் என்று அவதூறாக நாத்திகம் என்ற பத்திரிகையில் நாத்திகம் ராமசாமி எழுதினார். அதை எதிர்த்து எழும்பூர் நீதிமன்றத்தில் கலைஞர் அன்றைக்கே வழக்கு தொடர்ந்து, அந்த அவதூறு வழக்கில் நாத்திகம் ராமசாமிக்கு ஓராண்டு தண்டனை கிடைத்தது என்பது வரலாறு. அன்றைய பொருளாளருக்கு பிறகு இன்றைய பொருளாளர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். நிச்சயமாக அண்ணாமலைக்கு ஓராண்டுக் காலம் சிறை தண்டனை கிடைக்கும் என்பதை நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT