Advertisment

சனாதன விவகாரம்; உதயநிதி ஸ்டாலினை பதவியிலிருந்து நீக்கக் கோரி ஆளுநரிடம் பா.ஜ.க மனு

 Annamalai letter to Governor for Udayanidhi Stalin should be removed from office;

Advertisment

சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை நாம் எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநருக்கு இது குறித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், “சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு கொசுக்களை போன்று ஒழிக்க வேண்டும் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அதனால், இதுபோன்று பேசிய உதயநிதி ஸ்டாலினையும், இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

அண்ணாமலை எழுதிய இந்த கடிதத்தை தமிழக பா.ஜ.க துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், பால் கனகராஜ், மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன், தடா பெரியசாமி, நாச்சியப்பன் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

Advertisment

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் கரு. நாகராஜன், “அமைச்சராக உறுதிமொழி எடுத்துக் கொண்டதற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். எனவே, இதுபோன்று மக்களிடம் நஞ்சை விதைத்த உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதவியில் இருக்க தகுதி இல்லை. அதனால், அவரைபதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை ஒப்படைத்தோம். மேலும், இந்து மத உணர்வுகளுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்படி என்றால் அந்த துறையின் அமைச்சர் எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டும்.

அதனால், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை எழுதிய மற்றொரு கடிதத்தையும் ஆளுநரிடன் ஒப்படைத்தோம். மேலும், அமைச்சர் சேகர்பாபு சட்டப்படி பதவி விலகக் கோரி வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பாகத்தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மற்ற மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று கூறினார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe