Skip to main content

 “மன்னிப்பு கேட்க முடியாது”; பதுங்கும் அதிமுக - பாயும் அண்ணாமலை

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Annamalai has said that he cannot apologize for the Anna issue

 

அண்மைக்காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினர் மத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்துகொண்டனர். ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை; அண்ணா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சனையும் இல்ல; வரும் தேர்தலில் மோடி தான் பிரதமராக வேண்டும். இந்தியாவிற்கு மோடி; தமிழகத்திற்கு எடப்பாடி என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். 

 

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அதிமுக - பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை. என்னை பொறுத்தவரையில் பிரதமர் மோடியை யார் எல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். வேறு வேறு சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் கட்சிகள் இருக்கின்றன. அதனால் கட்சிக்குள் முட்டல் மோதல் வருவது சகஜம் தான். அதிமுகவின் சித்தாந்தம் வேறு. எங்களில் சித்தாந்தம் வேறு. நான் யாரையும் தவறாக பேசவில்லை; யாருடனும் பிரச்சனை இல்லை. அதிமுகவின் மூத்த தலைவர்களின் பேச்சுக்கு, பாஜக தேசிய தலைவர்கள் பதில் கூறுவார்கள். 

 

எனது அரசியலில் தெளிவாக இருக்கிறேன்; எனக்கு தன்மானம் முக்கியம். அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் பிரச்சனை இலை; அதிமுக தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன். செல்லூர் ராஜு கூறியது போல் மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி என்பதை என்னால் எப்படி ஏற்று கொள்ள முடியும்? என்னை பொறுத்தவரையில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதை கூறித்தான் நானும் தலைவர் பொறுப்புக்கு வந்தேன். அப்படி இருக்கும் போது எப்படி பழனிசாமியை முதல்வராக்குமாறு கூற முடியும்?

 

எனது அரசியல் ஆக்ரோஷமாகத்தான் இருக்கும். அதனை எல்லாம் தெரிந்துதான் என்னை மேலிடம் அனுப்பி வைத்திருக்கிறது. அதிமுக தலைவர்களின் தனி நபர் கருத்திற்கு நான் பதிலடி கொடுத்தால் நல்லா இருக்காது. அண்ணா குறித்து நான் தவறாக பேசவில்லை; சரித்திரத்தில் நடந்ததைத்தான் கூறினேன். 1998 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் ஒரு ரயில்வே விழாவில் நான் பேசிய அண்ணா பற்றிய நிகழ்வை பேசியிருப்பார்; வேண்டும் என்றால் தேடி பாருங்கள். அதனால் என்னை பொறுத்தவரையில் நான் பேசியதில் எந்த தவறுமில்லை;  உண்மையை பேசியிருக்கிறேன், அதனால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என்றார்.

 

அண்ணா குறித்து அண்ணாமலை பேசியபோது இந்தி நாளிதழில் 1956 ல் நடந்த சம்பவம் குறித்து செய்திகள் வந்திருக்கிறது என்றார். ஆனால் அண்ணாமலை கூறியது போல் எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை என்று இந்து குழுமம் தற்போது விளக்கமளித்துள்ளது; இது குறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது, “ இந்து குழுமம் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது; அன்றைக்கு வந்த இந்து நாளிதழை எடுத்து பாருங்கள். முன்பு இருந்த இந்து நாளிதழின் ஆசிரியர் வேறு தற்போது இருக்கும் ஆசிரியர் வேறு. இந்து மட்டுமல்ல, அது போன்று வேறு சில நாளிதழ்களில் வந்திருக்கிறது” என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்