Skip to main content

அண்ணாமலை - இபிஎஸ் சந்திப்பு; கழற்றி விடப்படுகிறாரா ஓபிஎஸ்?

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Annamalai EPS Junction; OPS is being removed

 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பப்படும் வேட்பாளரின் பெயரை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்றும், இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் நிலவியுள்ளதால் இது தொடர்பாக உரிய உத்தரவை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.  எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

 

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், “தற்போதைய சூழலில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறி இருந்தது. அதே சமயத்தில் அதிமுக இபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் அதிமுக பாஜக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயருக்கு பதில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த பதாகைகள் எதிலும் பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் கூட்டணி முறிந்ததா என்று சந்தேகம் வலுத்தது.

 

தொடர்ந்து அன்று மாலை அண்ணாமலை டெல்லி புறப்பட்டார். அங்கு பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி தர்மம் என்று ஒன்று உள்ளது. அதன்படிதான் நாங்கள் செயல்படுகிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் தலைமை. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. 2019ல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தபோது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றார். அதில் பாஜகவும் தானே இருந்தது. இன்றைக்கும் இந்த கூட்டணி தொடர்கிறது. பாஜக ஒரு தேசியக் கட்சி. உரிய நேரத்தில் அவர்களின் முடிவை அறிவிப்பார்கள்.  உடனே முடிவை தெரிவிக்க வலியுறுத்த முடியாது. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தலை பொறுத்தவரை  முன் வைத்த காலை பின் வைக்க போவதில்லை” எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும் பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவருடன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் ரவி மற்றும் கரு நாகராஜன் ஆகியோர் உள்ளனர். 

 

ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் இபிஎஸ் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாஜக போட்டியிட்டால் தனது வேட்பாளரை திரும்பப் பெற்று பாஜகவிற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்நிலையில் இபிஎஸ் - அண்ணாமலை சந்திப்பு பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.