Annamalai EPS Junction; OPS is being removed

Advertisment

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப்பேசி வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பப்படும் வேட்பாளரின் பெயரை தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்றும், இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் நிலவியுள்ளதால் இது தொடர்பாக உரிய உத்தரவை வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், “தற்போதைய சூழலில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறி இருந்தது. அதே சமயத்தில் அதிமுக இபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் அதிமுக பாஜக இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயருக்கு பதில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த பதாகைகள் எதிலும் பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் கூட்டணி முறிந்ததா என்று சந்தேகம் வலுத்தது.

தொடர்ந்து அன்று மாலை அண்ணாமலை டெல்லி புறப்பட்டார். அங்கு பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி தர்மம் என்று ஒன்று உள்ளது. அதன்படிதான் நாங்கள் செயல்படுகிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் தலைமை. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. 2019ல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தபோது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றார். அதில் பாஜகவும் தானே இருந்தது. இன்றைக்கும் இந்த கூட்டணி தொடர்கிறது. பாஜக ஒரு தேசியக் கட்சி. உரிய நேரத்தில் அவர்களின் முடிவை அறிவிப்பார்கள். உடனே முடிவை தெரிவிக்க வலியுறுத்த முடியாது. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தலை பொறுத்தவரை முன் வைத்த காலை பின் வைக்க போவதில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும்பாஜக தலைவர் அண்ணாமலையும்சந்தித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துவதாகத்தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவருடன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் ரவி மற்றும் கரு நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

Advertisment

ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் இபிஎஸ் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாஜக போட்டியிட்டால் தனது வேட்பாளரை திரும்பப் பெற்று பாஜகவிற்கு ஆதரவளிக்கத்தயாராக உள்ளதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்நிலையில் இபிஎஸ் - அண்ணாமலை சந்திப்பு பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.