ADVERTISEMENT

“இரட்டை இலை சின்னம் முடக்கம்” - எம்.பி தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் பா.ஜ.க!

11:39 AM May 10, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி யூனியன் பிரதேச நிகழ்ச்சிகளுக்காக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிக்குச் செல்லும் வழியில் சென்னை ஆவடியில் ஓரிரவு (23-ந் தேதி) தங்கினார். அது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய அமைச்சர் முருகன் ஆகியோரிடம் ஆலோசித்தார் அமித்ஷா. ஆலோசனை விவகாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக அடுத்த வருட துவக்கத்திலிருந்தே சில முடிவுகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டியதிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது. நாம் தனித்துப் போட்டியிடலாமா? இப்போதிருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாமா? என்று 3 கேள்விகளை கேட்டிருக்கிறார் அமித்ஷா.

அதற்கு அண்ணாமலை, "நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இப்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரலாம்'' எனச் சொல்ல, "அ.தி.மு.க.வுடன் கூட்டணின்னா அது பா.ஜ.க. தலைமையில் எப்படி அமையும்? அதற்கு அ.தி.மு.க. ஒப்புக்கொள்ளுமா?'' என சி.டி.ரவி கேட்க, "இப்போதைய அ.தி.மு.க. பலவீனமாக இருக்கிறது. அவர்களுக்கும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதனால், 50:50 சீட் ஷேரிங்கில் அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்'' என்றிருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.தான் அண்ணாமலையின் சாய்ஸ். கேசவவிநாயகமோ, "தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்கணும்னா அ.தி.மு.க. வலிமையாகனும். ஆனா, அது அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் லாபம். தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை தவிர்த்து ஒரு வலிமையான வேறு ஒரு கட்சி இங்கு இல்லை. இருந்தால் ஒருவேளை மக்களின் மனம் மாறலாம். அதனால் அ.தி.மு.க. பலவீனமாகி பா.ஜ.க. பலமாக தெரிந்தால் மட்டுமே தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

இந்த சூழலில் பேசிய சுதாகர் ரெட்டி, "அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. போட்டியிடும்போதுதான் கணிசமான வெற்றி கிடைக்கிறது. அதனால், தனித்துப் போட்டியிடலாம். அந்த முடிவை எடுத்தால், இரட்டை இலையை முடக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு பலமே அதன் சின்னம்தான். அ.தி.மு.க. பலவீனமாகிவிட்டால் பா.ஜ.க. பக்கம் மக்கள் திரும்ப வாய்ப்பிருக்கிறது'' எனச் சொல்லியிருக்கிறார்.

இதனை உன்னிப்பாகக் கவனித்த அமித்ஷா, "இன்னும் ஆழமாக யோசிங்க. உங்கள் யோசனைகளை ஒரு ரிப்போர்ட்டாக கொடுங்கள்'' என்றிருக்கிறார். பின்னர் அமித்ஷாவை தனியாக சந்தித்து, தமிழக அரசின் சுகாதாரம், மின்சாரம், நெடுஞ்சாலை, இந்து சமய அறநிலை, தொழில், பத்திரப்பதிவு, நகராட்சி நிர்வாகம், கனிமவளம் உள்ளிட்ட துறைகளில் தி.மு.க.வுக்கு எதிராக தனக்கு கிடைத்த மெட்டீரியல் எவிடென்ஸ்களை அமித்ஷாவிடம் விவரித்திருக்கிறார் அண்ணாமலை. முதல்வர் குடும்ப நபர்களின் ஆதிக்கம் குறித்தும் பேசியிருக்கிறார்.

இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுக்கும் அசைன்மெண்ட்டை பா.ஜ.க.வும் சசிகலா தரப்பும் தனித்தனி ரூட்டில் தொடங்கிய பணிகள் தொய்வடைந்திருக்கிறது. இவர்களிடம் சிக்காத அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தி.மு.க.வின் வலையில் விழுந்துள்ளனர். அமைச்சர்கள் ஏ.வ.வேலு, செந்தில்பாலாஜி, சேகர்பாபு, அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிடியில் அந்த 22 எம்.எல்.ஏ.க்களும் இருப்பதாக தி.மு.க. தரப்பில் எதிரொலிக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT