Skip to main content

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள்...

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
anna - mgr - Jayalalithaa

 

 

சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பெயர்களை சூட்டியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2003-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசால் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித்தடம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 18,380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு தேவையான மாநில அரசின் நிலங்கள் மற்றும் நிதி பங்களிப்பினை வழங்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

 

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் - கட்டம்-ஐ-ன் கீழ்,  ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. மேற்கண்ட மெட்ரோ நிலையங்களின் பெயர்களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி. இராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப்போல், ஆலந்தூர் மெட்ரோ – என்பது ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்று பெயரிடப்படுகிறது. அதேபோல் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு ‘புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்’ என்று பெயர் வைத்ததைப்போல சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்று அழைக்கப்படும்.

 

ஜெயலலிதா, ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை  நினைவு கூறும் வகையில்,  புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது கோயம்பேடு புறநகர் ஜெயலலிதா மெட்ரோ நிலையம் என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Metro train service extension

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (26-03-2024) மாலை 07.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டான்ஸ் அணிகளிடையே போட்டி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை இரவு 11:00 மணி முதல் அதிகாலை 01:00 மணி வரை (27-03-2024 - 01.00 AM) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும். கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு அரசினர் தோட்டம் அல்லது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆன்லைனில் (சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஆப், பேடிஎம் ஆப், போன்பே ஆப், வாடஸ் அப், போன்றவை) மூலம் பயணச்சீட்டை பெறலாம். அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம். பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் பயணிக்கலாம். இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.