Skip to main content

அன்புமணி முதல்வர் வேட்பாளரா? பாமகவை வைத்து பாஜக போடும் திட்டம்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

சென்னைக்கு 11-ந் தேதி மோடி வந்த நிலையில், அதற்கு முதல் நாள் டெல்லியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸையும், அன்புமணி ராமதாஸையும் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களது சந்திப்பு தொடர்பாக பா.ஜ.க. தரப்பிடம் விசாரித்த போது, தயக்கத்தோடு தான் அக்கட்சியினர் பேச ஆரம்பித்தார்கள். தமிழகத்தில் தாமரையை மலர வைக்க, மோடியும் அமித்ஷாவும் பெரிதும் நம்பியது  நடிகர் ரஜினியைத் தான். ஆனால் அவர் தற்போது வரை எந்த க்ரீன் சிக்னலும் பாஜகவிற்கு கொடுக்கவில்லை. 
 

bjp



அதனால், வேறு வியூகங்கள் பற்றி ஆலோசிக்கும் பா.ஜ.க. மேலிடம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்வாக்கோடு இருக்கும் பா.ம.க.வைப் பா.ஜ.க.வோடு நெருக்கமாக்கும் முயற்சியில் டெல்லித் தலைமை இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போதைய நிலவரத்துக்கு அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி, அடுத்து பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளர் என்கிற சாய்ஸையும் இந்த சந்திப்பின்போது மோடி கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் நல்ல முடிவை விரைவில் எடுக்கும் படி தைலாபுரத் தரப்பிடம் மோடி கேட்டுக்கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறிவருகின்றனர். இந்த தகவல் குறித்து பா.ம.க. தரப்பிடம் கேட்டபோது, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி பற்றித்தான் பேசி உள்ளார்கள். மற்றதெல்லாம் வெறும் யூகங்கள்தான் என்று கூறிவருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.