Skip to main content

“மனிதர்களால் இதை தாங்க முடியாது” - மத்திய மாநில அரசை எச்சரிக்கும் அன்புமணி

Published on 03/03/2023 | Edited on 04/03/2023

 

Anbumani warns central state government that "humans cannot withstand heat wave"

 

கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து இருப்பதால் உடனடியாக வெப்பத் தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் பிப்ரவரி மாத வெப்ப நிலை கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் பதிவாகியிருப்பதாகவும், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் மிகக் கடுமையான வெப்ப அலைகள்  வீசக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். வெப்ப அலைகளால் மனிதர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் அதை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தியாவில் கோடை வெப்பம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 1901 ஆம் ஆண்டுக்கு பிந்தைய 122 ஆண்டுகளில் மார்ச் மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் பதிவானது. சென்னையில் மார்ச் மாதங்களில் அதிக அளவாக 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவாகும் நிலையில், கடந்த ஆண்டு 38 டிகிரி செல்சியஸ் பதிவானது. நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப நிலை உச்சத்தை அடையும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

 

இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த காலத்தில் வெப்ப அலைகள் வீசக்கூடும். பல நேரங்களில் வெப்பநிலை வட இந்தியாவில் 49 டிகிரி செல்சியஸ் வரையிலும், தென் மாநிலங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரையிலும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுநர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். வெப்பநிலை உயர்வால் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுவதுடன், மனிதர்களுக்கு எண்ணற்ற உடல் நல பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தேவையான வெப்பத் தணிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். சென்னை போன்ற கடலோர நகரங்களில் 37 டிகிரி செல்சியசும், சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியசும், மலைப் பகுதிகளில் 30 டிகிரி செல்சியசும் வெப்ப அலையாக கருதப்படுகின்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது வெப்பத்தின் தாக்கம் இன்னும் கூடுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக  38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன், ஈரப்பதத்தின் அளவு 65% ஆக இருந்தால், அப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் 59 டிகிரி அளவுக்கு இருக்கக் கூடும். இதை மனிதர்களால் தாங்க முடியாது.

 

அதிகரிக்கும் கோடை வெப்பம் மிகவும் ஆபத்தானது. இதனால் பலவிதமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பமும் அதிகமாகிறது. அதனை சமாளிக்க உடல் வியர்வையை வெளியேற்றுகிறது. ஆனாலும், மனித உடலால் ஓரளவுக்குத்தான் வெப்பத்தை குறைக்க முடியும். மிக அதிக வெப்பத்தால் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வெப்பத் தளர்ச்சி ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப மயக்க நோய் மிக ஆபத்தானதும் உயிரிழப்பை ஏற்படுத்துவதுமாகும். சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் வெப்பத்தால் அதிகம் பாதிப்படைகின்றனர். சுவாச நோய்கள், இருதய நோய்கள், நீரிழிவு குறைபாடு உடையவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள், உயர்வெப்ப சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், குடிசைவாசிகள் உள்ளிட்டோர் வெப்பத்தால் மிக அதிக அளவில் பாதிப்படைகின்றனர்.

 

வெப்ப அலைகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு உடனடியாக செய்ய வேண்டியது, அது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். கோடை காலத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன? என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த பணியில் அனைத்து வகை ஊடகங்களும் தமிழ்நாடு அரசுக்கு உதவியாக செயல்பட வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்படும் மக்களுக்கும் மருத்துவம் வழங்குவதற்கான வசதிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். போதிய எண்ணிக்கையில் 108 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும். கோடைக் காலத்தில் மின்சாரமும், குடிநீரும் தடையின்றி வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசுத் துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும். கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும் நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். திறந்த வெளிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். அதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசியுடன் மற்ற உணவுப் பொருட்களையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும்.

 

இனி வரும் ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளனவே தவிர, குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதைக் கருத்தில் கொண்டு, நீண்டகால வெப்பத் தணிப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற வீடுகள், கட்டிடங்களின் மேற்கூறைகளை வெள்ளை வண்ணத்திலும், சூரிய ஆற்றலை ஈர்க்காத முறையிலும் அமைப்பதன் மூலம் வீடுகளுக்குள்ளும் நகரங்களிலும் வெப்பத்தை குறைக்க முடியும். நகரங்களில் மரங்களை வளர்ப்பதன் மூலம் வெப்பநிலையை 8 டிகிரி வரை குறைக்கலாம். நீர்நிலைகளை பாதுகாத்தல், காற்று மாசுபாட்டை தடுத்தல், பொதுப் போக்குவரத்தை அதிகமாக்குதல், போக்குவரத்தை சீர்படுத்துதல் ஆகியவையும் நகர்ப்புற வெப்பத்தை சமாளிக்கும் வழிகளே. இவ்வாறான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி இனி வரும் காலங்களில் கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.