Advertisment

“சாலையில் சென்றாலும், வீட்டில் இருந்தாலும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை” -  அன்புமணி!

Anbumani says People  lives are not safe, whether they are on the road or at home

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின காரணமாக திமுக அரசின் முகமூடி கிழிந்தது. வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு? என பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்றிரவு (07.06.2025) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றைத் தடுக்கத் தெரியாமல் திமுக அரசு தடுமாறி வருவது கண்டிக்கத்தக்கது.

Advertisment

அண்மைக்காலங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் பெரியவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். 6 மாதங்களுக்கு முன் நவம்பர் 28ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின், கடந்த மே மாதத் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராமசாமி, பாக்கியலட்சுமி ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைகளால் தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டது.

Advertisment

நவம்பர் மாதம் நடந்த மூவர் படுகொலைக்கு காரணமானவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக கைது செய்யப்படாத நிலையில், மேலும் இருவர் படுகொலை செய்யப்பட்டதால், தமிழக காவல்துறையின் செயல்திறன் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டன. அதனால், விளாங்காட்டு வலசு கொலை வழக்கில் தொடர்புடையதாக ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ், ஞானசேகரன் ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறையினர், இவர்கள் தான் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் மூவரையும் கொலை செய்ததாகக் கூறி வழக்குகளை முடித்தனர். அப்போதே அவர்கள் தான் உண்மையான கொலையாளிகளா? என்பது குறித்து ஐயங்கள் எழுப்பப்பட்டன.

இத்தகைய சூழலில் தான் பரமத்தி அருகே மேலும் ஒரு படுகொலை நிகழ்ந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்றால், இந்தக் கொலையை செய்தவர்கள் யார்?. ஒருவேளை இந்தக் கொலையை செய்தவர்கள் புதிய கொலையாளிகள் என்றால், அதைத் தடுக்க அரசும், காவல்துறையும் தவறியது ஏன்?. தோட்டத்துக் கொலைகளைத் தடுக்க பண்ணை வீடுகளை ஒட்டிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை கூறியிருந்த நிலையில் அவற்றையும் தாண்டி இந்த படுகொலை எவ்வாறு நடந்தது? என்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் விளக்கமளிக்க வேண்டும். மொத்ததில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நாடகமாடிய திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது.

Anbumani says People  lives are not safe, whether they are on the road or at home

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றன. சாலையில் சென்றாலும், வீடுகளில் இருந்தாலும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. இதற்கெல்லாம் காரணமான திமுக அரசை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss police tn govt old lady paramathi velur namakkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe