Advertisment

“வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களை நியமிப்பது சரியானதாக இருக்காது” - அன்புமணி ராமதாஸ்

Anbumani ramadoss speech about waqf amendment bill

வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பாக இஸ்லாமிய தனிநபர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளில் உணர்வுகளும், விருப்பங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்லாமிய மத நலன் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கொடையாக வழங்கப்பட்ட சொத்துகளை நிர்வாகம் செய்வதற்கான வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான முன்வரைவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், சட்டத்திருத்த முன்வரைவு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு சென்னையில் இன்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்துகளைக் கேட்கிறது. மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான இந்த நடவடிக்கை வக்ஃப் தொடர்பான பயனுள்ள நடவடிக்கையாகவும் அமைவதை நாடாளுமன்றக் குழு உறுதிசெய்ய வேண்டும்.

Advertisment

நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த முன்வரைவில் 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தின் பெயரை மாற்றுவது உள்ளிட்ட 44 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வக்ஃப் வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலராக இணைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்; அவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத இருவரை நியமிக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட புகழ்பெற்ற நபர்களை வக்ஃப் வாரியத்திற்கு நியமிக்கும் போது அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, ஒரு சொத்து வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதா, அரசுக்கு சொந்தமானதா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை வக்ஃப் வாரியத்திடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுவது. வக்ஃப் சொத்துகள் குறித்த சிக்கல்களை விசாரிப்பதற்கான தீர்ப்பாயத்தின் அதிகாரத்தைக் குறைப்பது போன்றவை தான் வக்ஃப் சட்ட முன்வரைவில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் முக்கியமானவை.

வக்ஃப் வாரிய நிர்வாகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் அதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து சீர்திருத்தங்களும் இஸ்லாமியர்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்றவையாக இருக்க வேண்டும். அதற்காக இக்கருத்துக் கேட்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வக்ஃப் சொத்துகள் அனைத்தும் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின்படி மதநலன் மற்றும் தொண்டு சார்ந்த நோக்கங்களுக்காக கொடையாக வழங்கப்பட்டவை. வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதற்கான வாரியத்திற்கு அரசு வழிகாட்டுதல்களை வழங்கலாம். அதற்கு மாறாக வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களை நிர்வாகிகளாக நியமிப்பது சரியானதாக இருக்காது. அதை இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் வக்ஃப் வாரிய நிர்வாகம் முடங்கி விடுவதற்கோ, நிலை குலைந்து போவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நடந்தால் அது அரசின் நோக்கத்திற்கு எதிரானதாகவே அமையும். அத்தகைய நிலை ஏற்படுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் இஸ்லாமிய தனிநபர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளில் உணர்வுகளும், விருப்பங்களும் மதிக்கப்பட வேண்டும். அதன்படி சென்னையில் இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கூட்டத்தில் வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பான இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகள் மிகவும் விரிவாக கேட்கப்பட வேண்டும்.

இதற்கு முன் அகமதாபாத்திலும், ஹைதராபாத்திலும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், அடுத்து பெங்களூரில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளால் தெரிவிக்கப்படவுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வக்ஃப் சட்டத்திருத்த முன்வரைவில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதனடிப்படையில் வக்ஃப் சட்டத் திருத்த முன்வரைவு அனைவராலும் ஏற்கப்படும் ஒன்றாக மாற்றப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

bill waqf
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe