Advertisment

“தமிழக ஆட்சியாளர்களால் பாலாறு பாழாறு ஆகி விட்டது” - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss insists An environmental monitoring committee should be formed

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, பாலாற்றில் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் கலந்து விடப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் கடந்த 2001, 2009 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை அடுத்த 6 வாரங்களில் வழங்க வேண்டும்; தோல் தொழிற்சாலைகளில் இருந்து திறக்கப்படும் கழிவு நீரால் பாலாறு மற்றும் வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் கண்காணிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், அங்குள்ள மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

Advertisment

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராகவும், தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில், பாலாறு பாயும் அனைத்து பகுதிகளிலும் ராமதாஸ் 3 நாட்களுக்கு மிதிவண்டி பேரணி நடத்தினார்; ராமதாஸும், நானும் இணைந்து இராணிப்பேட்டையில் கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலை ஒன்றின் கழிவு நீர் கால்வாயை சுவர் எழுப்பி தடுத்தோம் என்பன உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

ஆனால், தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து வேலூரையும், பாலாற்றையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக ஆட்சியாளர்களுக்கு சிறிதும் இல்லாததால் தான் பாலாறு பாழாறு ஆகி விட்டது. இந்த விவகாரத்தில் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு துணையாக இருக்க வேண்டிய ஆட்சியாளர்கள் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களின் பக்கம் நின்றது தான் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் ஆகும். தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பாலாறையும், அதன் கரைகளில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்தத் தீர்ப்பை செயல்படுத்தத் தவறியவர்களையும், இந்தத் தீர்ப்பை மீறுபவர்களையும் தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கூட அடைக்க மாட்டோம்; தில்லியில் உள்ள திகார் சிறையில் தான் கொண்டு வந்து அடைப்போம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலாற்றைக் காக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்பதை இதிலிருந்தே தமிழக ஆட்சியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, இனியும் தாமதிக்காமல் தோல் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக நீதி வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அதற்கான தொகையை ‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். சுற்றுசூழலை பாதுகாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

environment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe