anbumani

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிப்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் தீமைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்துகொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கும் துண்டுப்பிரசுரத்தை வழங்கி வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய மாநில அரசுகள் டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு சூழ்ச்சி செய்து வருகிறது. இதனால் பேராபத்து ஏற்படப்போகிறது. பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் அகதிகளாக வாழும் நிலைமை ஏற்பட ஏற்பட போகிறது.

Advertisment

மத்திய அரசு இந்தியா முழுவதும் 54 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதில் தமிழகத்தில் கடலூர், நாகை மாவட்டங்களில் மூன்று இடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இப்பகுதிகளிலுள்ள 45 கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசடையும் நிலை ஏற்படப்போகிறது.

எனக்கு இந்த திட்டத்தால் எந்த பிரச்சினையும். இல்லை நான் சென்னையில் வாழ்கிறேன். ஆனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடவில்லை என்றால் பேராபத்தை சந்திக்க நேரிடும். இந்த பகுதியில் வாழும் மக்களை காக்க ஓடோடி வருவேன். நான் அரசியல் பேசவோ, ஓட்டுக்காகவோ இங்கு வரவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பதை தடுக்கவே வந்திருக்கிறேன்.

அனைத்து மக்களும் எந்தவித பாகுபாடின்றி இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள நிலங்களில் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டேன். எடப்பாடி பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர். மோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்காக எதையும் செய்யக்கூடியவர். அவர்களுக்கு மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லை.

Advertisment

தமிழகத்திலுள்ள டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பெட்ரோல் கெமிக்கல் மண்டலத்திற்கு திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக அரசு அதனை நிறைவேற்ற துடித்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள சைமா சாயப்பட்டறை தொழிற்சாலையின் கழிவுகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வெளிநாடுகளில் இதுதடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் அனல்மின் நிலையம் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தாய்மார்களுக்கு தாய்ப்பாலில் டையாக்சின் என்ற புற்று நோயை ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் கூறுகிறார்கள். பலர் அங்கு புற்று நோயால் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இந்த இடமும் அமைந்துவிடக்கூடாது. இதனால் கடல் உயிரினங்களும் அழியும் நிலை ஏற்படும். விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படும். எனவே இதனை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து திட்டத்தை அகற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இலங்ககையில் தமிழர்களை கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சே மீன்டும் அதிபராக பதவியேற்றது கண்டிக்கதக்கது. சூழ்ச்சியால் பதவியேற்றுள்ளார். இதற்கு இந்திய அரசு துணைநிற்கிறது என்றார்.

இதனைத்தொடர்ந்து அவர் புவனகிரி சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்குடி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.