நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் தினகரன் பிரிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 6 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார். மேலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தார். கடந்த வாரம் தினகரன் கட்சியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் இணைந்தார். இது தினகரன் கட்சிக்கு மேலும் சரிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தினகரன் கட்சியில் இருந்து இன்று விலகுவதாக அக்கட்சியில் அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா தெரிவித்தார்.
மேலும் அடுத்த வாரம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் அதிமுகவில் இணையப் போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமமுகவில் இருந்து அடுத்து யார் விலக போகிறார்கள் என்று தெரியவில்லை. இது பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது, தினகரன் கட்சியிலிருந்து சமீப காலமாக அக்கட்சியின் நிர்வாகிகள் விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனால் அக்கட்சியின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக மேலும் சிலர் விலக வாய்ப்பு உள்ளது. அதில் குறிப்பாக சினிமா துறையை சேர்ந்த அமமுக நிர்வாகிளான நடிகர் ரஞ்சித், டான்ஸ் மாஸ்டர் கலா, பாடகர் மனோ இவர்களும் மிக விரைவில் மாற்று கட்சியில் இணைவார்கள் என்று கூறினர். அரசியல் பார்வையாளர்களின் கருத்து படி நடக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்த்தால் தான் தெரியும் என்று மக்கள் கருதுகின்றனர்.