Skip to main content

அமமுக வேட்பாளர்கள் அதிருப்தி!

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலும் , 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதில் 18 தொகுதிகளுக்கும் அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டனர். அதில் திமுக  மற்றும் அதிமுக கட்சிக்கு இணையாக செலவு செய்து தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தங்களிடம் செலவு செய்ய போதிய பணம் இல்லை, தலைமை பணம் தந்தால்தான் அதிமுகவிற்கு இணையாக தேர்தலில் செலவு செய்ய முடியும் எனவும் கூறிவிட்டனர். 

 

ttv



பின்பு அக்கட்சியின் தலைமையின் உத்தரவின் பேரில் வேட்பாளர்களுக்கு வரும் செலவில் பாதி பணத்தை கட்சியும் மீதமுள்ள பணத்தை வேட்பாளர்களும் செலவு செய்யும் படி அறிவுத்தபப்ட்டது. தேர்தல் முடிந்த பின்பு வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை கட்சி தலைமை தருவதாக உறுதியளித்தது, இதனையடுத்து  வேட்பாளர்களும் தங்களின் கைகளில் இருந்த பணத்தையும், கடனுக்கு வாங்கியும் செலவு செய்துள்ளனர். ஆனால் அக்கட்சியின் தலைமையோ வாக்கு வங்கி  உள்ள  தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மட்டுமே தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்ததாகவும் மீதம் இருக்க கூடிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தபடி வேட்பாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காததால் அவர்கள் கடும் அதிருப்தியை அடைந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.இதுகுறித்து தலைமையிடம் கேட்டு எந்த பதிலும் இல்லாததால்  என்ன செய்வதென்று தெரியாமல் வேட்பாளர்கள்  உள்ளனர் என்று அமமுக வட்டாரங்கள் புலம்பிக்கொண்டு வருகின்றனர் .
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

வெயிலின் தாக்கம்; வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
heat exposure; Samiana pandal at polling centers

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுசேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்பு வசதி சரியான நிலையில் கதவு, ஜன்னல் மின்சார வசதி, ஃபேன், வாக்காளர் வந்து செல்ல வழிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், குடிநீர் மர நிழல், அல்லது கான்கிரீட் தள நிழல், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.  

இந்தநிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் நிழல் தரும் மரங்கள் அல்லது கட்டிட நிழல் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர இதர வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை வாக்குச் சாவடிகளுக்கு சாமியான பந்தல் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பிறகு சாமியானா பந்தல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.