தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் தீவிர பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ராஜிவ் நகரில் அமைச்சர் கடம்பூர் ராஜு தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காரின் அருகையே அமமுகவினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி அருகே உள்ள ராஜிவ் நகரில் அமமுகவினர் அக்கட்சியின் பிரமுகரை வரவேற்க பட்டாசு வெடித்தனர். அதேநேரம் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு கடம்பூர் ராஜு அவ்வழியே வந்தார். அப்போது அவரின் கார் அருகேயே அமமுக தொண்டர் ஒருவர் பட்டாசு வெடித்தார். கடம்பூர் ராஜுவின் கார் நகர முடியாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றது. அதன்பிறகு காவல்துறையினர் அவர காரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தகடம்பூர் ராஜு, “திட்டமிட்டு முன்னால் வாகனங்களை வைத்து மறித்துவிட்டு, அதன்பிறகு என் காரின் அருகே வெடியை வெடித்தார்கள். இரண்டு நிமிடங்கள் காத்திருந்தால் என் வண்டி நகர்ந்துவந்திருக்கும். அதன்பிறகு அவர்கள் பட்டாசு வெடிக்கலாம்; என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்.
நான் வண்டியினுள் அமர்ந்திருந்தேன். நேற்றைய தினம் சிறிய அசம்பாவிதம் நடந்திருந்தால், என் உயிருக்கே ஆபத்தான நிலைமை ஏற்பட்டிருக்கும். ஆனால், இதனை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. நான் எனது பணியை முடிக்க வேண்டும். என் தேர்தல் பணியை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்துள்ளனர்” என குற்றஞ்சாட்டினார்.