Skip to main content

அம்மா உணவகத்தில் அதிமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற கட்சிகளுக்கும் வழங்கப்படுமா? கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்திவந்த அம்மா உணவகங்கள் அனைத்திலும் அ.தி.மு.க. சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.


  amma unavagamஇதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார். இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்புகள் தமிழக அரசின் சார்பில் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

அம்மா உணவகங்கள் மூலமாக மலிவான விலையில், ஏழை எளிய மக்களுக்காக உணவு வழங்குவதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட திட்டமாகும். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அத்திட்டத்தின் மீது உரிய கவனம் செலுத்தாத காரணத்தாலும், போதிய நிதி ஒதுக்காத நிலையிலும் அம்மா உணவகங்கள் முடங்கிய நிலையில் வரவேற்பில்லாமல் இருந்தது.
 

nakkheeran appதற்போது திடீரென்று அம்மா உணவகத்தின் மூலமாக அ.தி.மு.க. கட்சியின் விலையில்லா உணவு வழங்க அனுமதிப்பது பாரபட்சமானது, ஒருதலைப்பட்சமானது. அம்மா உணவகத்தை தமிழக அரசின் நிதியிலிருந்துதான் நடத்தவேண்டுமேயொழிய அ.தி.மு.க. கட்சியின் நிதியிலிருந்து நடத்துவது சட்டவிரோத செயலாகும். எனவே இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெறவேண்டும்.

அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க அ.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா? அம்மா உணவகம் என்பது அரசுக்கு சொந்தமானது. அதை ஆளும்கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது. அப்படி மீறி பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகமாகும். ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால் ஏற்கனவே நடத்தியதைப்போல அம்மா உணவகங்களை உரிய நிதி ஒதுக்கி சிறப்பாக நடத்த வேண்டும்.

மேலும் இலவச உணவளிக்க அ.தி.மு.க. விரும்பினால் அம்மா உணவகத்தை தவிர்த்துவிட்டு, மற்ற அரசியல் கட்சிகள் வெவ்வேறு இடங்களை எப்படி தேர்வு செய்து ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்குகிறதோ, அத்தகைய நடவடிக்கையைத்தான் பின்பற்ற வேண்டும் என  தமிழக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளை நடத்தவிடாமல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எதிர்ப்புகள் எழுந்து வருவது மக்களிடையே அந்த நோய் தொற்று குறித்து அச்சமும், பீதியும் அதிகரித்து சரியான தெளிவு இல்லாதது தான் காரணமாகும். இந்நிலையில் மருத்துவர்களின் உடலை கூட தகனம் செய்ய விடாமல் கலகம் விளைவித்து கல்வீச்சில் ஈடுபட்டது கடுமையான கண்டனத்திற்குரியது.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்தகைய போக்கு நீடிக்க அனுமதிப்பது கரோனா நோயை எதிர்த்து அர்ப்பணிப்பு உணர்வோடு சிகிச்சை அளிக்க  போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை மனரீதியாக சோர்வடைய செய்யும். எனவே இத்தகைய மனிதாபிமானமற்ற, அநாகரிகமான செயல்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். கரோனா தொற்று நோயினால் எவராவது இறந்தால் அவர்களை அருகிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். அதை எவராவது தடுக்க முற்பட்டால் அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கரோனா தொற்று காரணமாக சென்னை நரம்பியல் நிபுணரும், முப்பது ஆண்டுகளாக மக்களுக்கு சேவைசெய்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்யத்தான் கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள மயானத்தில் எதிர்ப்பு தெரிவித்து கலவரம் ஏற்பட்டது. மேலும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் இறந்தபோது சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் சிலர் போராட்டம் நடத்தினார்கள். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட  மக்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரை அர்ப்பணித்த இரு மருத்துவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்