Amit Shah visit to TN Will disturb DMK  sleep BJP ANS Prasad

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 8ஆம் தேதி மதுரைக்கு வருகிறார். அவரது வருகை, தமிழக அரசியலில் வழக்கம் போல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது வருகை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், "கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை வந்த பாஜக முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை அறிவித்தார். இது திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் அலற வைத்துள்ளது.

அதன்பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கூட்டணி தலைவர்கள் அதிமுக பாஜக கூட்டணி பற்றியே பேசி வருகின்றனர். இதனால் தமிழக அரசியலே, ஏப்ரல் 11 ஆம் தேதி அமித்ஷா வருகைக்கு முன்பு, அமித்ஷா வருகைக்குப் பின்பு என மாறியுள்ளது. இப்படி தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 8ஆம் தேதி சங்கம் வளர்த்த, தமிழகத்தின் கலாசார தலைநகரான மதுரைக்கு வருகிறார். அங்கு நடக்கும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வழிகாட்ட இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் நீண்ட, நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். மக்களோடு மக்களாக எப்போதும் இருந்து அவர்களின் எண்ண ஓட்டங்களை நன்கறிந்தவர். கடந்த இரண்டரை மாதங்களாக, ஓய்வின்றி தமிழகம் முழுவதும் பயணித்து கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தார். மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்கான கூட்டங்களில் பங்கேற்றார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாட, தேசியக் கொடி பேரணிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.

Advertisment

இந்த உற்சாகமான, மகிழ்வான மனநிலையில் அமித்ஷா மதுரை வருவதை விட பாஜக தொண்டர்களுக்கு மகிழ்வான செய்தி இருக்க முடியாது. மதுரையில் பேசப்போகும் அமித்ஷா, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தெளிவான பாதையைக் காட்ட இருக்கிறார். திமுக கூட்டணிக்குச் சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் அமித்ஷாவின் வியூகம் இருக்கப் போகிறது. திமுக கூட்டணி கட்சியினரின் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறது. அமித்ஷாவின் மதுரை வருகை, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மதுரைக்கு வரும் அமித்ஷாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்கிறார் ஏ.என்.எஸ்.பிரசாத்.