Skip to main content

‘மக்களவைத் தேர்தலில் கூட்டணி’ - பாமக  திட்டவட்டம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Alliance in lok sabha Election pmk decide

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கௌவுரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸுகு அதிகாரம் வழங்கியும் பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் கூட குறைந்தது 7 இடங்களில் பாமக வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி தனித்து போட்டியிட இப்பொழுது பாமக தயாராக இல்லை” எனத் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்